நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை

4 weeks ago 5


நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.

இதில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டை விதித்தது.

அதன்படி தற்போது நீலகிரி மாவட்ட எல்லைகளான கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி ஆகிய 14 சோதனைசாவடிகளில் இ-பாஸ் சோதனை தீவிரமாக செய்து வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இ-பாஸ் சோதனை காரணமாக அப்பகுதிகளில் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேசும்பொருளாக மாறியது.

இதுதொடர்பாக கடந்த 7-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல்கூடலூர், கெத்தை ஆகிய 5 பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மட்டும் இ-பாஸ் சோதனை நடத்தும்படி அறிவுறுத்தியது.

இந்நிலையில் நீலகிரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இந்த இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வருவதாக அம்மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

Read Entire Article