
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீரை தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறது. சிறுத்தை புலிகள் இரவில் ஊருக்குள் வந்து கால்நடைகளை கடித்து கொன்று வருகின்றது.
இந்த நிலையில் கூடலூர் கோத்தர் வயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் நாடு காணி நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது கூடலூர் - கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையை சிறுத்தை புலி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கடக்க முயன்றது. அப்போது ராஜேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் சிறுத்தை புலி மோதி படுகாயமடைந்து நடுரோட்டில் மயங்கி விழுந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் சிறுத்தை புலியை கண்டு அச்சமடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ராஜேஷ் காயம் அடைந்தார்.
மோதிய வேகத்தில் சிறுத்தை புலி உயிரிழந்திருக்கலாம் என அனைவரும் திகைத்து நின்றனர். இந்த நிலையில் மயக்கம் தெளிந்து சிறிது நேரத்தில் சிறுத்தை புலி எழுந்து சாலையோர புதர்களுக்குள் ஓடித் தலைமறைவாகியது. பின்னர் காயம் அடைந்த ராஜேஷ் அக்கம்பக்கத்தினர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் மோதிய வேகத்தில் சிறுத்தை புலி சிறிது காயம் அடைந்து இருக்கலாம். அதன் பின்னர் சுதாகரித்து கொண்டு வனத்துக்குள் ஓடிவிட்டது. என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும் சிறுத்தை புலி நடமாட்டத்தால் கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.