சென்னை: “புதிய பாசனத் திட்டத்தை செயல்படுத்த திறனற்ற திமுக அரசு, குறைந்தபட்சம் இருக்கும் நீர்நிலைகளையாவது பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஏற்கனவே இருக்கும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பது எந்த வகையில் நியாயம்? எனவே, தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதை திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வளர்ச்சி, கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம் கடந்த அக்டோபர் 18 முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத் தக்கது. பாமகவும், பல்வேறு உழவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த பிறகும், தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.