சென்னை: சீமான் தலைமையில் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இனி அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தால், அதற்குக் அந்த கட்சியினரிடமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நாளை மறுதினம் (மார்ச் 16) சீமான் தலைமையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி நிர்வாகி சசிக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருப்போரூரில் உள்ள கந்தசாமிக் கோயில் திருவிழாவைக் காரணம் காட்டி போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர் என்றும், எனவே கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தலைமையில் அமைதியான முறையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும், எனக் கோரியிருந்தார்.