நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

3 hours ago 2

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் , “அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறோம். கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். சுதந்திர தினத்தன்று நான் அறிவித்த முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்வர் மருந்தகங்களைத் தொடங்க ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மருந்துகளுக்கு மக்கள் அதிக அளவில் செலவு செய்வதைத் தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

மக்கள் மீதான பொருளாதார சுமையை குறைக்கவே முதல்வர் மருந்தகங்களை திறக்க திட்டமிட்டோம். சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு உதாரணம் தான் இந்த முதல்வர் மருந்தகங்கள். மாவட்ட மருந்துக் கிடங்குகளில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகங்களுக்கு 48 மணி நேரத்தில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும். கொரோனா காலத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த பல்வேறு சிறப்பு முயற்சிகளை எடுத்தோம். தமிழ்நாட்டில் 8.57 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் காலத்தை உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு மக்களின் தனித்தனி தேவைகளை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நாட்டுக்கு முன்மாதிரியாக வழிகாட்டியாக கலைஞர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் உள்ளன. ஒன்றிய அரசு நிதி வழங்காமல் இருந்தாலும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பது இல்லை. முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட்ட நோக்கம் சிதையாமல் செயல்படவேண்டும். முதல்வர் மருந்தகங்கள் மேலும் அதிகரிக்கப்படும். முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தின் நோக்கம் சிதையாமல் அதை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!! appeared first on Dinakaran.

Read Entire Article