சென்னை: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். கை ரிக்ஷாவை ஒழித்ததுபோல் சாதியை ஒழிப்பது தொடர்பாக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மையப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா எனவும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா எனவும் விளக்கமளிக்குமாறு அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட நீதிபதி, ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் சேரும்போது சாதிகள் இல்லையடி பாப்பா என்றும் சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் கற்றுக் கொடுத்த நிலையில் இன்று நீதிபதியான நிலையில் படித்த பாடங்களின் அடிப்படையில் நிற்க வேண்டாமா?.
குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உறுப்பினராக இருக்கலாம் என்ற விதியை திருத்தும் படி சங்கங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு காகிதத்தில் மட்டுமே உள்ளது. எந்த சங்கங்களும் தங்கள் விதிகளில் திருத்தங்கள் செய்யவில்லை. பள்ளிகளில் சாதி இருக்க கூடாது என நீதிபதி சந்துரு குழு அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டபோதும் பள்ளிகளின் பெயரில் இன்னும் சாதி நீடிக்கிறது. அரசு பள்ளிகளில் எப்படி ஜாதிப் பெயர் இருக்க முடியும்?.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். கை ரிக் ஷாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவு கொள்ளும். சாதி சங்க விவகாரத்தில் நிலைபாட்டை தெரிவிக்க அரசுக்கு கடைசி வாய்ப்பாக மார்ச் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அப்போது, அரசு விளக்கம் அளித்தாலும் இல்லாவிட்டாலும் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
The post நீதிமன்றம் உத்தரவிட்டாலும் சாதியை கைவிடமாட்டார்கள் கை ரிக்ஷாவை ஒழித்ததுபோல் சாதியையும் ஒழித்தால் நாளைய வரலாறு பேசும்: ஐகோர்ட் அதிரடி கருத்து appeared first on Dinakaran.