நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை.! திருநெல்வேலியில் பரபரப்பு

4 months ago 15

நெல்லை: நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் மாயாண்டியை துரத்தி சென்றது.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவரை 4 பேர் வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

The post நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை.! திருநெல்வேலியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article