மதுரை: நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதால் கடந்த 2 மாதத்தில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளது என நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான வருவாய்த் துறை முதன்மை செயலாளர் அமுதாவிடம் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றியவர் செல்வநாயகம். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பணப்பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி செல்வநாயகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். பணப்பலன்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வநாயகம் மனு தாக்கல் செய்தார்.