சென்னை: ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதியளித்த அட்வகேட் ஜெனரலின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு குருமூர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 ஜனவரி 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள், யார் மூலமாவது, யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர் என்று பேசினார்.
இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன் நிராகரித்துவிட்டார். இதையடுத்து, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரிடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திரும்பப் பெற்றார். இந்நிலையில், தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை திரும்பப் பெற்றதை எதிர்த்து குருமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, அட்வகேட் ஜெனரலின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், அட்வகேட் ஜெனரல் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்பதால், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, 12 வாரங்களில் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு குருமூர்த்திக்கு உத்தரவிட்டது.
The post நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அவதூறாக பேசிய விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: ஆடிட்டர் குருமூர்த்திக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.