அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை: கோவை சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

3 hours ago 2

கோவை: அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக மாஜி நிர்வாகி உள்பட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு, அதிமுக ஆட்சியின்போது 8க்கும் ேமற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை சேர்ந்த சிலர் சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. எனவே, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திமுக, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 2021ம் ஆண்டு சிபிஐக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், பொள்ளாச்சி ஜோதிநகர் சபரிராஜன் (28), மாக்கினாம்பட்டி திருநாவுக்கரசு (30), சூளேஸ்வரன்பட்டி சதீஸ் (29), சூளேஸ்வரன்பட்டி வசந்தகுமார் (26), ஆச்சிபட்டி மணிவண்ணன் (28), மகாலிங்கபுரம் பாபு என்கிற பைக் பாபு (28), ஆச்சிபட்டி ஹேரன்பால் (29), வடுகபாளையம் அருளானந்தம் (36), பொள்ளாச்சி பணிக்கம்பட்டி அருண்குமார் (29) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹேரன்பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021ல் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி முன்னாள் செயலாளர் ஆவார்.

இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 15 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில், 48 அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 206 ஆவணங்கள், 5 செல்போன், 5 லேப்டாப் உட்பட 40 மின்னணு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் சிபிஐ தரப்பில் 1,500 பக்கம் கொண்ட 3 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர் விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில், ஒவ்வொரு வாய்தாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். கடந்த மாதம் இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவுபெற்றன. இதையடுத்து, கைதான 9 பேரிடம், சட்ட விதிகள் 313-ன்கீழ் கேள்விகள் கேட்பதற்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கடந்த மாதம் 5ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். இந்த நடைமுறை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன்பிறகு, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது. அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, இதர நாட்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இருதரப்பு வக்கீல்கள் வாதம் தொடர்ச்சியாக நடந்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவு பெற்று மே 13ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினிதேவி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை 8.30 மணியளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். போலீஸ் வேனில் இருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கப்பட்டு, கோர்ட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அவர்கள், தங்களது முகம் வெளியே தெரியக்கூடாது என மாஸ்க் அணிந்திருந்தனர். அனைவரது கண்களிலும் என்ன ஆகுமோ என்ற பதற்றம் காணப்பட்டது. பின்னர் நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் 9 ேபரும் காலை 10.15 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி, காலை 10.40 மணிக்கு மேல் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். அப்போது, இவ்வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். ஒவ்வொருவர் மீதான தீர்ப்பும் தனித்தனியாக வழங்க வேண்டி உள்ளதால் மதியம் 12 மணிக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஆர்.நந்தினிதேவி தெரிவித்தார். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் அனைவரும் அமர வைக்கப்பட்டனர்.

இதன்பின்னர் மதியம் 12.40 மணிக்கு ஒவ்வொரு குற்றவாளிக்கும் தனித்தனியாக தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். இதன்படி குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் மாவட்ட சட்ட உதவி மையம் மூலம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் மொத்தம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுரேந்திரமோகன், மகாராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.

எதிர் தரப்பில் வக்கீல்கள் ஜான்சன், மிக்கேல்பாரதி, செந்தில்குமார், ரிஷ்வந்த், ஜான் ஸ்டீபன், பழனிசாமி, சாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள், மேல்முறையீடு செல்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9 பேரும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. ‘‘அப்படி மேல்முறையீடு செய்தாலும், இதே தண்டனை மேல் கோர்ட்டிலும் உறுதி செய்யப்படும். அந்த அளவுக்கு சாட்சியங்களும், ஆவணங்களும் பலமாக உள்ளன’’ என அரசு தரப்பு வக்கீல் சுரேந்திர மோகன் கூறினார்.

8 எப்ஐஆர் ஒன்றாக இணைப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மொத்தம் 8 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்களும் தனித்தனியாக புகார் அளித்த காரணத்தால், 8 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரே வழக்காக சேர்க்கப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பொள்ளாச்சி கிழக்கு போலீசார், சிபிசிஐடி போலீசார், சிபிஐ என 3 விசாரணை ஏஜென்சிகள் இவ்வழக்கை கையாண்டனர். இதில், சிபிஐ நுழைந்த பிறகுதான் இந்த வழக்கு வேகம் எடுத்தது.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே நகர திமுக சார்பில் தீர்ப்பை வரவேற்று, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் முன்னிலையில், திமுக சட்டத்திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பாலியல் குற்றவாளிகளின் உருவப்படத்தை கையில் ஏந்தியும், அதிமுகவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
பொள்ளாச்சி வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் தீர்ப்பின் முழு விவரத்தின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது வந்தவுடன் கலந்தாலோசித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்’’ என்றார்.

800பக்க தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், தீர்ப்பு விவரம் 800 பக்கங்களை கொண்டதாக உள்ளது. இதை பிடிஎப் செய்து, நீதிமன்ற போர்டரில் (இணையதள பகுதி) அப்லோடு செய்வது என்பது பெரும் சிரமமான காரியமாக உள்ளது. மேலும், பிற வழக்குகள் போல் இல்லாமல், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால், நீதிமன்ற போர்டரில் அப்லோடு செய்யும்போது பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம், அவர்களது பெயர் விவரம் உள்பட எந்த பகுதியும் வராமல் இருக்கவேண்டும் என்பது மற்றொரு முக்கியமான அம்சமாக உள்ளது. அதனால், தீர்ப்பு நகல் வெளியிடப்படவில்லை.

இரண்டாவது பெரிய வழக்கு
பாலியல் வழக்கை பொறுத்தவரை டெல்லி நிரூபமா வழக்கு விசாரணைக்கு பிறகு, பொள்ளாச்சி பாலியல் வழக்குதான் மிக ரகசியமாக நடத்தி முடிக்கப்பட்ட பெரிய வழக்கு ஆகும். இதில், பாதிக்கப்பட்ட 8 பெண்களிடமும் மிக மிக ரகசியமாக கோர்ட்டில் வாக்குமூலம் பெறப்பட்டது. இவர்கள் எப்போது கோர்ட்டுக்கு வருகிறார்கள்? எப்போது வெளியே செல்கிறார்கள்? என்ற விவரம் தெரியாதபடி மிக ரகசியமாக கோர்ட்டில் அத்தனை விசாரணையும் நடந்து முடிந்தது. இதுவும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டதை தொடர்ந்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரலாறு காணாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு, கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அந்தந்த வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

The post அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை: கோவை சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article