சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தரக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், இதுவரை நடந்த நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் பெண்களுக்கு நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ஒரே சமூகத்தினரை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது, ஒரே வழக்கறிஞர் சங்கத்தை சார்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுடன், தலைமை நீதிபதி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் வேல்முருகன், வழக்கறிஞர் பால் கனகராஜ், வழக்கறிஞர் பார்வேந்தன், மில்டன் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.