ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம்

3 hours ago 2

சென்னை: ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம் என அறிவிப்புக்கப்பட்டுள்ளது. நந்தனம் YMCA கல்லூரி மைதானத்தில் “Shreya Ghoshal Live – All Hearts Tour” இன்னிசை கச்சேரி” மார்ச் 1, 2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் BToS-Event நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் தளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிய இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு பிரத்யேக ஸ்பான்சர் செய்யப்பட்ட டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும்.

இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை மார்ச் 1, 2025 அன்று ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 23:17 மணிக்கும், விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 23:37 மணிக்கும் புறப்படும்.

பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மெட்ரோ மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களில் 24:00 மணி வரை வழித்தட மாற்றம் செய்து கொள்ளலாம். பயணிகளின் வசதிக்காக அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. வழக்கமான வாகன நிறுத்தம் கட்டணம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article