நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்; ஏன் எப்.ஐ.ஆர். பதிவு இல்லை? துணை ஜனாதிபதி கேள்வி

1 day ago 1

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந்த் வர்மா. ஹோலி பண்டிகையின்போது இவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு படையினர், தீயை அணைக்க சென்றபோது, அந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் இருந்தன. அவற்றை பின்னர் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

கணக்கில் காட்டப்படாத அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் விசாரணை நடத்தியது. இதன்பின்னர் சம்பந்தப்பட்ட நீதிபதியை அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றம் செய்ய முடிவு செய்தது. கொலீஜியம் தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது.

எனினும், முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்தனர். அலகாபாத் ஐகோர்ட்டு ஒரு குப்பைத் தொட்டியா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் வெளிவந்ததும், நீதிபதியின் பொறுப்பில் இருந்து வர்மா உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதுபற்றி டெல்லி ஐகோர்ட்டு சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், அடுத்த உத்தரவு வரும் வரை வர்மாவை பணியில் இருந்து நீக்கி உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உள்ளது. இந்த சூழலில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று பேசும்போது, நீதிபதிகளின் பொறுப்பு பற்றி தீவிர கேள்விகளை எழுப்பியதுடன், எப்.ஐ.ஆர். பதிவு போடாமல் இருப்பது பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவர் பேசும்போது, ஒரு மாதம் கடந்து விட்டது. கேன் (கொள்கலம்) முழுவதும் புழுக்களாகவும், கப்-போர்டில் எலும்பு கூடுகளும் உள்ளன என்றால், அவற்றை வெளியே கொண்டு வரும் நேரமிது. கேன் மூடியை திறக்க வேண்டிய நேரம் இது.

கப்-போர்டை உடைக்க வேண்டிய நேரமிது. புழுக்களையும், எலும்பு கூடுகளையும் வெளியுலகிற்கு கொண்டு வாருங்கள். இதனால், தூய்மை செய்யும் பணி நடைபெறும் என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

எப்.ஐ.ஆர். இல்லாத சூழலில், சட்டத்திற்கு உட்பட்டு எந்தவித விசாரணையும் நடைபெறாமல் உள்ளது என சாடிய அவர், சட்டத்தின் விதியை மட்டுமே ஒருவர் செயல்படுத்த வேண்டும். அதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை. ஆனால், அது நீதிபதிகள் என வரும்போது, எப்.ஐ.ஆர். நேரடியாக பதிவு செய்யப்பட முடியாது. நீதித்துறையின் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Read Entire Article