
சென்னை,
மாவட்ட நீதிபதியாக 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட குணசேகர் என்பவர் மீது சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதனால், அவர் விருப்ப ஓய்வு கேட்டு 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு எதிரான குற்ற குறிப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதனால், 58 வயதை அவர் பூர்த்தி செய்ததால், அவருக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் 7 பேர் கொண்ட நிர்வாக குழு முடிவு செய்தது. அவருக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்து, அரசுக்கு பரிந்துரையும் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, அவருக்கு 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ந் தேதி கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குணசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியரின் வருவாய் ஆதாரத்தில் இருந்து இல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்கள் வாங்கிய சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை.
குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு சுற்றறிக்கை, அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளது. அதனால் கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை ரத்து செய்து, உரிய பணப்பலன்களுடன் விருப்ப ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தரப்பில் ஆஜரான வக்கீல், ''நீதிமன்ற ஊழியர்களை மோசமாக நடத்தியது, மனைவி பெயரில் 25 அசையா சொத்துகள் வாங்கியது, பி.எம்.டபிள்யூ சொகுசு கார் வாங்கிய விவரங்களை ஐகோர்ட்டுக்கு தெரிவிக்காதது, மனுதாரரின் சம்பள வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பெருந்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளது. பொதுநலனை கருதி, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என ஐகோர்ட்டு நிர்வாக குழு நீதிபதிகள் முடிவு செய்தனர்'' என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''நீதித்துறை அதிகாரியான மாவட்ட நீதிபதி, ஐகோர்ட்டு உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். நீதித்துறை அதிகாரியை, அரசு ஊழியர்களைப்போல கருத முடியாது. நீதித்துறை அதிகாரிகள் உச்சபட்ச நேர்மையை கொண்டிருக்க வேண்டும். அதனால் ஐகோர்ட்டு நிர்வாகக் குழு முடிவில் தலையிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.