பிரதமர் மோடி 26-ந்தேதி குஜராத் பயணம்; ரூ.82,500 கோடி திட்டப்பணிகள் தொடக்கம்

5 hours ago 2

காந்திநகர்,

பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகிற 26 மற்றும் 27 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணம் பற்றி குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்வி செய்தியாளர்களிடம் கூறும்போது, காந்திநகரின் மகாத்மா மந்திரில் நகர்ப்புற வளர்ச்சி ஆண்டுக்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையை குஜராத் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அவரை வரவேற்கவும் தயாராக உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

அவருடைய இந்த வருகையை தொடர்ந்து, மொத்தம் ரூ.82,500 கோடிக்கும் கூடுதலான மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளார் என மந்திரி சாங்வி கூறியுள்ளார். இதன்படி அவருடைய இந்த பயணத்தின்போது, முதல் நாளான 26-ந்தேதி (நாளை மறுநாள்) கச் மாவட்டத்துக்கு செல்கிறார். இதன்பின்னர் பூஜ் நகரில் உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.

அவர் பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான 33 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கியும் வைக்க உள்ளார். இதேபோன்று, குஜராத் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் பெறும் வகையில், ஆஷாபுரா தம் ஆன்மிக மையத்தில் வளர்ச்சி பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

கச் மாவட்டத்தில் அமைந்த இந்த ஆன்மிக மையத்தின் வளாகம், ரூ.32.71 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை மாநில அரசு மற்றும் குஜராத் பவித்ர யாத்ராதம் விகாஸ் வாரியம் இணைந்து மேற்கொண்டது. அந்த பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனால், பக்தர்கள் கூடுதல் வசதியை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read Entire Article