
டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், #பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.