நாகப்பட்டினம்,அக்.21: நீண்ட தூரம் சென்று நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாக தமிழக அரசு இருக்கும் என்று தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் அறிவுரை வழங்கி உள்ளார். நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். டிஆர்ஓ பேபி தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை டிஆர்ஓ பேபி, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் வழங்கினர்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பேசியதாவது:
எங்களை போன்றவர்கள் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் இல்லை. படிப்பதற்கே நீண்ட தூரம் சென்று படிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டிற்கு மக்களுடன் முதல்வர், இல்லம் தேடி கல்வி என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார். பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று திட்டங்களை பெற்ற காலம் மாறி அரசு ஊழியர்கள் பொதுமக்களை தேடி சென்று திட்டங்களை அளித்து வருகின்றனர்.
இதன்படி மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டது. கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் பயன் பெற வேண்டும் என்ற நோக்குடன் தாலுகா தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. வேலை வாய்ப்பு முகாம்களில் வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்கள் குறைந்த ஊதியம் என காரணம் கூறி வேலைக்கு சொல்லாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். இந்த குறைந்த ஊதியத்தை கொண்டு பெற்றோர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உயர் கல்விக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் கிடைத்த பின்னர் வேறு ஒரு நிறுவனத்திற்கு சென்று அதிக ஊதியம் பெறமுடியும்.
அதே போல் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் தங்களது குழந்தைக்கு வேலை வேண்டும் என கூறுவார்கள். அதே நேரத்தில் நீண்ட தூரத்தில் வேலை கிடைத்தால் இவ்வளவு தூரத்திற்கு பெண் குழந்தையை அனுப்ப முடியாது என கூறி வேலை வாய்ப்பை தவிர்த்தவிடுகின்றனர். பெண் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொள்வது பெற்றோர்களின் கடமை. அதே நேரத்தில் படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பும் அவசிம் என்பதை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு வாங்கி தரும் தமிழ்நாடு முதல்வர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் இருக்கமாட்டார்.
நீண்ட தூரத்தில் அரசு வேலை கிடைத்தால் தங்களது பெண் குழந்தைகளை பணிக்கு அனுப்பு பெற்றோர் தனியார் வேலை என்றால் நீண்ட தூரத்திற்கு அனுப்ப மறுப்பது ஏன் என தெரியவில்லை. அரசு துறையில் எந்த அளவிற்கு பாதுகாப்பு உள்ளதோ அந்த அளவிற்கு தனியார் துறையிலும் தமிழ்நாடு முதல்வர் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார் என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. நம்மிடம் இருந்து களவு போகாத ஒரே செல்வம் கல்வி. இந்த கல்வியை கற்றவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று தங்களது திறமையை வளர்த்து கொள்வதுடன், தங்களது குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து டிஆர்ஓ பேபி பேசியதாவது:
வேலை தரும் நிறுவனங்கள் தேaர்வு செய்த பணியாளர்களிடம் அந்த திறமை இல்லை. இந்த திறமை இல்லை என கூறி பணிகளை திரும்ப பெறுவதை கைவிட வேண்டும். நமது வீட்டில் உள்ள குழந்தைக்கு ஒரு வேலை செய்ய தெரியவில்லை என்றால் பெற்றோர்கள் கற்று கொடுத்து அந்த பணியை செய்ய பழக்குவார்கள். அது போல் பணி வழங்கும் நிறுவனம் பழக்க வேண்டும். அதே போல் பணி செய்யும் இடத்தில் வரும் சிறிய சிறிய பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் பணி செய்யும் இடத்தை நமது வீடு போல் நினைத்து பணியாற்ற வேண்டும். பெண் குழந்தைகள் குழவி கூட்டிற்குள் இருக்கும் புழுவாக இருக்காமல் பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டும். இதற்கு எந்த இடத்தில் வேலை கிடைத்தாலும் செல்ல வேண்டும். அதற்கு தைரீயத்தை முதலில் வளர்ந்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் நீண்ட தூரம் செல்ல தயக்கம் காட்டினாலும் பெற்றோர்கள் தைரீயத்தை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில்மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கார்த்திகேயன், மகளிர் திட்ட அலுவலர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நீண்ட தூரம் சென்று நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாக தமிழக அரசு இருக்கும்: வேலைக்கு சென்று குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.