வேலூர்: நீட் விவகாரத்தில் போராட்டம் நடத்தும் அதிமுகவுக்கு தைரியம் இருந்தால், சட்டசபையில் பேசட்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். காட்பாடியில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேகதாது அணைக்கு கர்நாடகா அரசு பணம் கட்டி திட்ட மதிப்பீடு அனுமதி வாங்கியுள்ளனர். நமக்கு என்னவென்று ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் 4 கமிட்டிகளில் மேகதாதுவுக்கு ஒப்புதல் அளிக்காமல், கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்காமல், திருப்பி அனுப்பிவிட்டனர். சுற்றுச்சூழலும், ஒன்றிய நீர் வளத்துறையும் அனுமதியை வழங்கவில்லை. தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது. இது பெரிய பிரச்னை. எதிர்க்கட்சிகள் எல்லாம் மேகதாது விவகாரத்திற்கும், முல்லை பெரியாறு விவகாரத்திற்கும் ஒரு கண்டன தீர்மானம் கூட கொண்டு வரவில்லை என கூறுகிறார்கள். நாங்கள் வழக்கில் இருக்கிறோம்.
நாங்கள் ஏன் கண்டன தீர்மானம் கொண்டு வரவேண்டும். நீட் விவகாரம் குறித்து போராட்டம் நடத்தும் அதிமுகவினருக்கு, தைரியம் இருந்தால் சட்டசபையில் பேசட்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது தொடர்பாக நிருபர்கள் கேட்டதற்கு, `ஐயோ பாவம்’ என்றபடி புறப்பட்டு சென்றார்.
The post நீட் விவகாரத்தில் போராட்டம் நடத்தும் அதிமுகவுக்கு தைரியம் இருந்தால் சட்டசபையில் பேசட்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.