'நீட்' விலக்கு விவகாரம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம்

1 week ago 4

சென்னை,

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், நாடு முழுவதும் நீட் தேர்வு அமலில் இருப்பதால், தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி சட்டசபையில் நீட் விலக்கு சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்ததை தொடர்ந்து மீண்டும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி சட்டசபையில் அதே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 4-ந் தேதி சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை. போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். மேலும், இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனை கூட்டம் வரும் 9-ந் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும்" என்று அறிவித்தார்.

அதன்படி இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 11 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துவிட்டார். பா.ஜ.க.வும் கலந்துகொள்ளாது என்று தெரிகிறது.

Read Entire Article