
சென்னை,
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சூர்ய மூர்த்தி அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை முடித்து ஐகோர்டு முடித்து வைத்தது. இதற்கிடையில் இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அதிமுக, பொது செயலாளர் எடிப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் கட்சியில் பிளவுகள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே விசாரணையை தொடர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை, சூர்ய மூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில் சேர்க்க கோரி அதிமுக தரப்பில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படி விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பி உள்ளதாக, அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மறு ஆய்வு மனு செல்லத்தக்கதல்ல என்று கூறி, மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார்.