புதுடெல்லி: தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியானது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய ‘நீட்’ இளங்கலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட நகர்வை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு, நிகர்நிலை மற்றும் மத்தியப் பல்கலைக்கழக இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகியன கலந்தாய்வு மூலமே நடத்தப்படும்.
இந்த கலந்தாய்வு தேதிகளுக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு, தற்போது மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2025ம் ஆண்டு கலந்தாய்வு அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று மற்றும் இறுதிச் சுற்று என நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. மாநில ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வருகிற 21ம் தேதியும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வருகிற 30ம் தேதியும் தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து மற்ற சுற்றுகள் நடைபெறும். அனைத்துக் கலந்தாய்வு சுற்றுகளும் முடிவடைந்து, மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான கடைசித் தேதி அக்டோபர் 3ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்வியாண்டு செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நீட் முடிவுகள் வெளியான நிலையில் 21ம் தேதி இளங்கலை மருத்துவ கலந்தாய்வு: வகுப்புகள் தொடங்கும் நாளும் அறிவிப்பு appeared first on Dinakaran.