திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் கொக்கைன் போதைப்பொருளை கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்திய பிரேசில் நாட்டு தம்பதியை வருவாய் புலனாய்வு துறை கைது செய்தது. கேரளாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் எம்டிஎம்ஏ கொக்கைன், உயர்ரக கலப்பின கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுப்பதற்காக விமான நிலையங்களில் வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வெளிநாட்டில் இருந்து கொச்சி வரும் ஒரு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று வெளிநாடுகளில் இருந்து கொச்சி வந்த விமானங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஒரு விமானத்தில் வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த தம்பதியின் நடவடிக்கைகளில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த பேக்கை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
ஆனால் அவற்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை. ஆனாலும் கூடுதல் பரிசோதனைக்காக இருவரையும் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் ஏராளமான கேப்சூல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் கொக்கைன் போதைப்பொருளை கேப்சூல்களில் அடைத்து விழுங்கியது தெரியவந்தது. இருவரது வயிற்றுக்குள்ளும் 80க்கும் மேற்பட்ட கேப்சூல்கள் காணப்பட்டன.
இதை தொடர்ந்து அவற்றை வெளியே எடுப்பதற்காக இருவரையும் போலீசார் அங்கமாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போதைப்பொருளை கேப்சூல்களில் அடைத்து விழுங்குவது மிகவும் ஆபத்தானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவை வயிற்றுக்குள் வைத்து வெடித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று அதிகாரிகள் கூறினர். இருவரது வயிற்றுக்குள் இருந்தும் கேப்சூல்களை வெளியே எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் பிரேசில் தம்பதியின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் கொச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு போதைப்பொருளை கடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அவர்கள் யாருக்காக இவற்றை கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கொக்கைன் போதைப்பொருள் விழுங்கி கடத்திய பிரேசில் தம்பதி கைது: கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.