நீட் தேர்வு விவகாரத்தில் ஏப்.9ல் சட்டமன்ற அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

5 days ago 8

சென்னை : நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து நடைபெறவுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை

“மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நமது மாநிலத்தில் பல்லாண்டுகளாக பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை முறையே இந்த சாதனைகளுக்கு அடிப்படை.2006 ஆம் ஆண்டில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழிற்பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை இரத்து செய்து, பள்ளிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் பயிலக்கூடிய பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூகநீதியையும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்குச் சமவாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்.

சமூகநீதியை நிலைநாட்டி, கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கக்கூடிய இந்த முறையால்தான் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறோம்.

ஆனால், நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்தத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற இயலாத கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது. மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளிலும் – பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும்.

நீட் தேர்வானது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது என்பதிலும், இந்தத் தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும், தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் உள்ள கருத்தொற்றுமையின் அடிப்படையில், சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே.இராஜன் அவர்களின் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவினை இந்த அரசு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்தச் சட்டமன்றப் பேரவையில் 13.09.2021 அன்று, தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 என்ற சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனைச் செய்திட திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் என் தலைமையில் 05.02.2022 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, இந்தச் சட்டமுன்வடிவினை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 08.02.2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை – ஆயுஷ் துறை – உள்துறை உயர்கல்வித் துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது. ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காமல், நமது மாணவர்களுக்குப் பெரும் பேரிடியாக ஒன்றிய அரசு நமது நீட் விலக்குச் சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்க செய்தியை இந்தப் பேரவையில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பினை அவமதித்துள்ள ஒன்றிய அரசின் இத்தகைய எதேச்சாதிகார போக்கு, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சிக் கருத்தியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும், இந்தப் பேரவையின் தீர்மானங்களையும் ஒன்றிய அரசு கருத்தில்கொள்ளவே இல்லை; இதனை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பேரவைத் தலைவர் அவர்களே, ஒன்றிய அரசு நமது கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம்; ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை என்பதையும், இந்தப் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடமும் கலந்தாலோசிக்கப்படும்.

மேலும், இதுதொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9 ம் தேதி அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது. அதில் நமது சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இந்தத் தருணத்தில் தங்கள் வாயிலாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை இந்தப் பேரவையில் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொண்டு, அமைகிறேன்.

இவ்வாறு தெரிவித்தார்.

The post நீட் தேர்வு விவகாரத்தில் ஏப்.9ல் சட்டமன்ற அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Read Entire Article