சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த நிலையில், நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில், ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன. நிலைமை சரியான பின்னர் போட்டிகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதான அலுவலகத்திற்கு பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த இமெயிலில், ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக ஐபிஎல் போட்டி நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும். ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்பது குறித்து திருவல்லிக்கேணி போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.