சேப்பாக்கத்தில் ரூ.15.61 கோடியில் பல்நோக்கு மையம், 2 முதல்வர் படைப்பகம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதி!!

9 hours ago 2

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைகிராப்ட்ஸ் சாலையில் ரூ.15.61 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மையம், 2 முதல்வர் படைப்பகம் மற்றும் நூலகம் கட்டும் பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ரூ. 5.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 24 பணியாளர் குடியிருப்புகளை திறந்து வைத்து, திருக்கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஆணையினை வழங்கினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைகிராப்ட்ஸ் சாலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.15.61 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மையம், 2 முதல்வர் படைப்பகம் மற்றும் நூலகம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை, ராயப்பேட்டை, பைகிராப்ட்ஸ் சாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறையின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 12.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,408 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய புதிய பல்நோக்கு மையம் கட்டப்படவுள்ளது. இந்த பல்நோக்கு மையம் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 224 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபம், உணவு அருந்தும் இடம், தங்கும் அறைகள், நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மின் தூக்கி வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

மேலும், திருவல்லிக்கேணி ஜானி பாட்ஷா தெருவில் உள்ள பொது நூலகத்தை மேம்படுத்தும் விதமாக 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,273 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன பொது நூலகம், திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள பொது நூலகத்தை மேம்படுத்தும் விதமாக 1.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,420 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன பொது நூலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சேப்பாக்கம் கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை எதிரில் சைடோஜி தெருவில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் இடத்தில் 77.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 குடியிருப்புகள் கொண்ட கட்டடத்தை திறந்து வைத்தார்.

மேலும், மகாகவி பாரதியார் இல்லம் அருகில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் 3.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 குடியிருப்புகள் கொண்ட கட்டடம் மற்றும் 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 குடியிருப்புகள் கொண்ட கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, குடியிருப்புகளில் காற்றோட்ட வசதி, அறைகளின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் 12 நபர்களுக்கு குடியிருப்பு ஆணைகளை துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்புர வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் சு.பிரபாகர், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர்.சி.பழனி, இ,ஆ.ப., வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, இ,ஆ.ப., மாமன்ற ஆளும்கட்சி துணைத்தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மாமன்ற உறுப்பினர் சி.சிவராஜ சேகரன் உள்பட மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சேப்பாக்கத்தில் ரூ.15.61 கோடியில் பல்நோக்கு மையம், 2 முதல்வர் படைப்பகம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதி!! appeared first on Dinakaran.

Read Entire Article