சென்னை: ஈஸ்டில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானம் எது என நேற்று நடந்த நீட் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இம்முறை முறைகேடுகளை தவிர்க்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வழக்கமாக கடுமையான கெடுபிடிகளை காட்டிய அதிகாரிகள் தாலியையும் கழற்றச் சொன்னதால் மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வினாத்தாளில் 117-வது கேள்வியாக ஈஸ்ட்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் பீர், ரம், பிராந்தி, விஸ்கி ஆகியவை ஆகும். இந்த 4 விடைகளில் சரியானதை தேர்வு செய்து எழுத வேண்டும். இந்த கேள்விக்கு விடை பீர் என்பதாகும். இதை சரியாக எழுதியிருந்தால் 4 மதிப்பெண்கள் கிடைக்கும். நீட் தேர்வில் பீர், ரம், விஸ்கி, பிராந்தி குறித்த கேள்வி கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த கேள்விக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்க எத்தனையோ இருக்கும் நிலையில் மதுபானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
The post நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வியால் சர்ச்சை: கல்வியாளர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.