
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ந்தேதி நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசும்போது, மத, இன, மொழி, சாதி, சமய உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை செய்யாறு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி மாதம் செய்யாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் சீமான் ஆஜரானார். அதைத் தொடர்ந்து நேற்று 2-வது முறையாக சீமான் கோர்ட்டில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு நீதிபதி பாக்கியராஜ் ஒத்திவைத்தார்.
இதனையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் என்பது நேர விரயம்தான். நீட் தேர்வு தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நீட் ஒழிப்பு போராட்டம் தேர்தலுக்காக போடும் நாடகம்தான்.
கள் என்பது மது அல்ல, அது ஒரு உணவு. கள் மது போதை என தடைபோடும் அரசு, டாஸ்மாக் கடையில் விற்கப்படும் பிராந்தி, விஸ்கி என்ன புனித தீர்த்தமா? அல்லது மூலிகை பானமா? கள் இறக்க அனுமதி அளித்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும் என்பதால்தான் மறுக்கப்படுகிறது. எந்த மாநில முதல்வர்களும் சாராய தொழிற்சாலை வைத்திருக்கவில்லை. ஆனால் இங்கு சாராய தொழிற்சாலை வைத்துள்ளனர்.
டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில் கொடுத்தால் ரூ.10, சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறார்கள். ஒருபுறம் உங்களின் அப்பா பேசுகிறேன், போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்கிறார். அதே வேளையில் டாஸ்மாக் வியாபாரம் குறைந்த மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு என செய்தியும் வருகிறது.
வக்பு வாரிய சட்டம் குறித்து விஜய் தெரிந்து கொள்ளவில்லை என்பதைவிட அக்கட்சியின் சார்பில் போராட்டம் நடத்திய உணர்வை வரவேற்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதல்ல, ஆட்சியாளர்களுக்கே எல்லாம் தெரியவில்லையே. இவ்வாறு அவர் கூறினார்.