நன்றி குங்குமம் தோழி
சமீபத்தில் நிகழ்ந்த நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்-அக்ஷயா திருமணம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பிய நிலையில்… 2014ல் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரான சரவணனை நார்மலான பெண் மைதிலி காதலித்து கரம் பிடித்த கதையை கேட்ட போது…‘‘என் மகனுக்கு உங்க பொண்ணைக் கொடுங்கன்னு என் அம்மா, அப்பாவால் யாரையும் கேட்க முடியாது என்பதால் நானே மேட்ரிமோனியல் மூலம் பெண் தேட ஆரம்பித்தேன்’’ என்கிற சரவணன் முதுகுத் தண்டுவடப் பாதிப்பில் வீல்சேர் யூசராய் மாறியவர். சாஃப்ட்வேர்புரஃபஷனலான மைதிலியை மணந்து, மகள் ராகாவுடன் கோவையில் மகிழ்ச்சியாக வலம் வருகிறார் சரவணன்.
‘‘ஆரம்பத்தில் எனக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லாமல், தனியாகவே இருந்திடலாம் என்றுதான் யோசித்தேன். ஆனால் என்னுடன் விளையாடி… என்னோடு சினிமாவிற்கு வந்து… என் கூடவே பயணித்த சித்தப்பா, பெரியப்பா, அத்தை பிள்ளைகள், நண்பர்கள் திருமணமாகி அவரவர் மனைவி, குழந்தைகள் என மாறியதால் நான் தனிமையை உணர ஆரம்பித்தேன். நமக்கும் துணை தேவை என்கிற எண்ணம் எட்டிப் பார்த்தது.மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமே மைதிலி எனக்கு அறிமுகம். என் நிலை அறிந்தே மைதிலி விருப்பம் தெரிவித்திருந்தார். காரணம், மேட்ரிமோனியல் பக்கத்தில் எனது புகைப்படத்தை வீல்சேரில் இருப்பது… காலிஃபர் அணிந்து நிற்பது என்றே வெளிப்படுத்தி இருந்தேன். மைதிலி நார்மல் என்பதுடன், எம்சி.ஏ. முடித்து, பெங்களூர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியில் இருந்தார். இடையில் புராஜெக்ட் தொடர்பாய் யு.எஸ். சென்று வந்திருந்தார்.
நார்மலான பெண் ஒருவர் என்னை மாதிரியான மாற்றுத்திறனாளிக்கு விருப்பம் கொடுத்ததை என்னால் முதலில் ஏற்க முடியவில்லை. ஏன் கொடுத்தாங்க? எதற்கு கொடுத்தாங்க என்று குழம்பினேன். என் கண்டிஷனை அவரிடம் முழுமையாக விளக்கினேன். அனைத்தையும் கேட்ட பிறகும் என்னை பிடிச்சுருக்கு என மைதிலி சொல்ல, ஏன் பிடிச்சுருக்கு எனத் திரும்பத் திரும்பக் கேட்க ஆரம்பித்தேன்.மேட்ரிமோனியலில் உள்ள என் பக்கத்தில், எனக்குத் துணையாய் வரப்போகும் பெண்ணுடனான என் வாழ்வு எப்படியிருக்க வேண்டும் என்பதை ஒருசில வரிகளில் கவித்துவமாய் எழுதியிருந்தேன். அதாவது, “என் இணையாக வருபவர் என் ராணி.
அவர் கரம் பற்றி மகிழ்ச்சியாய் இந்த உலகை வலம் வரக் காத்திருக்கும் ராஜாவாகிய நான் பயணங்களில் காதலன் என்றும்… இருவருக்கும் வயதாகும் தருணத்தில்… அமைதி ததும்பும் விவசாய பண்ணை வீடு ஒன்றில்… அந்தி சாயும் மாலைப்பொழுதில்… எனது வீல்சேரில் நான் அமர்ந்திருக்க, என் அருகே அமர்ந்திருக்கும் என் இணையரின் கரம் பற்றி, காதல் ததும்ப இருவருமாக பேரக் குழந்தைகள் விளையாடுவதை பார்த்தே ரசித்திருப்போம்” என முடித்திருந்தேன்.
நான் எழுதி இருந்த இந்தப் பதிவு மைதிலியை ஈர்க்க, நான் வீல்சேர் பெர்சன் என்பதெல்லாம் மைதிலி மனதில் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் கொடுத்திருந்த லாங்டெர்ம் கமிட்மென்ட், என் மீதான நம்பிக்கையை மைதிலிக்கு முழுமையாகக் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் என் முகநூல் பக்கத்தின் லிங்கை அனுப்பி, அதிலிருக்கும் மீதி புகைப்படம், வீல்சேரில் நான் மூவ் செய்கிற காணொளி, காலிஃபர் அணிந்து நான் நிற்கும் புகைப்படங்களையும் பார்த்து விட்டு முடிவு செய்யச் சொன்னேன். அதன் பிறகும் மைதிலி எனக்கு ஓ.கே சொன்னார். ஒரு மாதம் சாட்டிங் வழியாகவே இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது திருமணம், தாம்பத்தியம், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தெல்லாம் உரையாடல் இருந்தது. மைதிலி நாலேஜான பெண் என்பதால், தாம்பத்தியத்திற்கான சில வழி முறைகள், செயற்கை கருத்தரிப்பு குறித்த இணைய லிங் போன்றவற்றை அனுப்பி, முழுமையாகப் படித்து தெரிந்து கொள்ளச் சொன்னேன்.இவற்றையெல்லாம் பார்த்த மைதிலி, ஒருவேளை நம்மால் இயல்பாகவோ அல்லது IVF மூலமோ குழந்தை பெற முடியவில்லை என்றாலும், குழந்தை ஒன்றை தத்தெடுத்துக்கொள்வோம் என்றார். இந்த வார்த்தை மைதிலி மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததுடன், எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது.
என்னை நேரில் பார்த்ததால் மைதிலி நிலை என்ன என்பதை உணர நினைத்தேன். 2013 ஒரு மாலைப் பொழுதில் எங்கள் சந்திப்பு ஒரு மால் வாசலில் நிகழ்ந்தது. அங்கே மைதிலி என் வருகைக்காக காத்திருக்க… நெஞ்சுவரை காலிபர் அணிந்திருந்த நான், காரில் இருந்து இறங்கி, மடக்கி வைத்த என் வாக்கரை எடுக்க டிக்கியை நோக்கி கொஞ்சம் தடுமாறி நகர… என்னை நோக்கி ஓடிவந்த மைதிலி, என்னைத் தாங்கி, வாக்கரையும் பிடிக்க… மைதிலி மீதான நம்பிக்கையில் நான் நிமிர்ந்து நின்றேன். அவரின் முதல் பார்வை எனக்கு நம்பிக்கை தந்தது. வீல்சேரில் நான் உட்கார்ந்த பிறகும், வாக்கரை மடக்கி ஒருகையில் வைத்துக்கொண்டே, இன்னொரு கைகளால் எனது வீல்சேரைத் தள்ளிய படி நடக்க ஆரம்பித்தார். அந்த நிமிடம் மைதிலி என் தேவதையாகவே மாறினார்…’’ கண்கள் குளமாக பழைய நினைவில் கரைந்தார் சரவணன்.
அவரைத் தொடர்ந்து பேசிய மைதிலி, சரவணனின் தன்னம்பிக்கை பதிவுதான் எனக்கு அவரைப் பிடிக்கக் காரணம். ‘‘இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப நல்லா பார்த்துக் கொள்கிறோம். அவ்வளவுதான்’’ என்றவர்… ‘‘நாங்கள் நேரில் பார்த்துக்கொண்ட முதல் நொடி ஒரு எக்ஸைட்மென்ட் டே எங்களுக்கு. காரை விட்டு இறங்கி அவர் வாக்கரை எடுக்க முயற்சித்த போது… ஆயிரம் பட்டாம் பூச்சிகள் மனசுக்குள் படபடக்க… சரவணனாக மட்டுமே நான் அவரைப் பார்த்தேன். அவரின் டிஸபிளிட்டி என் கண்களில் படவில்லை. ஓடிச்சென்று வீல்சேரில் அமர வைத்து, வாக்கரை மடக்கி பிடித்தபடி கூடவே நடந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் வாக்கரை நான் தூக்க அவர் அனுமதிக்கவில்லை. ‘நான்தானே தூக்கணும் வேறு யார் தூக்குவா’ எனக் கேட்டேன்’’ எனப் புன்னகைக்கிறார் மைதிலி.
‘‘எனக்கு ஒரு டிரீம் இருந்தது. அவருக்கும் ஒரு டிரீம் இருந்தது. இரண்டும் ஒன்றாகவே இருந்தது. அதனால் அவர் மாற்றுத்திறனாளி என்பதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. கூடவே அவரின் இன்டிபென்டென்ஸி… மியூஸிக்… டிராவல்… இதெல்லாம் கூடுதல் பிணைப்பை கொடுத்தது. சாட்டிங் மூலமாகவே அவர் என்னோடு மென்டலாக கனெக்ட் ஆனார். அவருக்கும் எனக்கும் அதிக மெச்சூரிட்டி இருந்தது. அது எங்களை திருமணத்தை நோக்கி நகர்த்தியது’’ என்கிறார் ரத்தினச் சுருக்கமாக.
‘‘வீல்சேர் யூசர் பெர்சனோடு நான் நடந்து போகும் போது எல்லோர் பார்வையும் எங்கள் மீது இருக்கலாம். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை. ஏனெனில் என் கவனம் எப்போதும் அவர் மீது மட்டுமே’’ என்றவர், ‘‘தனுஷ்- அக் ஷயா திருமணத்தை எங்கள் பார்வையில் இருந்து கவனித்த பிறகே இருவரும் சொல்கிறோம்.. தனுஷ் குறித்து அத்தனை விஷயமும் தெரிந்து… அவரை உள்வாங்கி… மென்டலாக அவருடன் கனெக்ட் ஆன பிறகே அக்ஷயா திருமணத்திற்கு சம்மதிச்சு இருக்கணும். அந்தத் தெளிவை அவர் செயலிலும் பேச்சிலும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தனுஷுக்கும் ஷார்ப்பான மைன்ட் இருக்கு’’ என்றவாறு, மைதிலியை பார்த்து சரவணணும்… சரவணனைப் பார்த்து மைதிலியும் காதலோடு புன்னகைத்து விடைகொடுத்தனர்.
நான் கோல்டு மெடலிஸ்ட்!
‘‘இந்த சம்பவம் நிகழ்ந்தது 1997ல். பத்தாம் வகுப்புத் தேர்வை முடித்த மகிழ்ச்சியில் நண்பர்களோடு மொட்டை மாடியில் விளையாட, விளையாட்டு ஆர்வத்தில் மாடியில் இருந்து பின்புறம் கீழ் நோக்கி விழ, ஜன்னல் மேலிருக்கும் சன்ஷேட் மீது முதுகுத் தண்டுவடம் அடிபட்டு அப்படியே கீழே விழுந்ததில், நெஞ்சுக்குப்பின்னால் உள்ள ஸ்பைனல் கார்டு எலும்புகள் 3, 4ல் முறிவு ஏற்பட்டு நெஞ்சுக்குக் கீழ் உடல் இயங்க முடியாத அளவுக்கு பேரலைஸ் ஆனது.இனி நான் நடக்கவே முடியாது என மருத்துவர்கள் சொன்னதும் ஆடிப்போனேன். பெற்றோரும் பதறிவிட்டார்கள். இடது கை மட்டுமே இயங்க, முதுகில் பிளேட் வைத்தார்கள்.
எனக்காக அம்மா தனது மத்திய அரசு வேலையை உதறினார். பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் போனது மன அழுத்தத்திற்குள் என்னைத் தள்ள, இனியும் வாழவேண்டுமா என்கிற எண்ணம் அடிக்கடி எட்டிப் பார்த்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இதே நிலைதான்.பத்தாவது வரை வகுப்பில் நான்தான் முதல் மாணவன். விளையாட்டும் எனக்குப் பிடித்த விஷயம். கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஃபுட்பால், பேட்மின்டன், அத்லெட்டிக்ஸ் என எதையும் விட்டுவைப்பதில்லை. இஞ்சினியரிங் படித்து வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசையோடு சிவில் சர்வீஸ் கனவும் இருந்தது.
மாற்றுத்திறனாளி சிவில் சர்வீஸ் எழுத என்னவெல்லாம் செய்ய வேண்டும் என கூகுளில் தேடி, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனை படித்து முடித்தேன். பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்றவை மூலம் என்னை திடப்படுத்திக் கொண்டு, நெஞ்சுவரை காலிஃபர் அணிந்து, வாக்கர் துணையுடன் மெல்ல மெல்ல நடக்கவும், வீல்சேரில் பயணிக்கவும் ஆரம்பித்தேன். யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலைகளை நானே செய்கிற அளவுக்கு என்னை முன்னேற்றிக் கொண்டு, ஆன்லைன் கன்டென்ட் ரைட்டராக எனக்கான வருமானத்தை லட்சங்களில் சம்பாதிக்க ஆரம்பித்தேன். எனக்கு வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள்.
பாராலிம்பிக் நேஷனல் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் நான் கோல்டு வின்னர். விளையாட்டுக்காக ஜோர்டன் வரை தனியாகவே பயணித்தேன். இன்றுவரை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முயற்சியையும் தொடர்கிறேன். நான் பயணங்களின் காதலன் என்பதால், குடும்பத்தோடு சளைக்காமல் நீண்ட தூரம் எனது காரை ஓட்டி பயணிக்கிறேன்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
The post நீ பார்த்த பார்வை… appeared first on Dinakaran.