
மாணவர்களிடையே நீ என் நண்பேன்டா என்ற உணர்வுதான் எப்போதும் இருக்கவேண்டும் என்பதே நல்லோர் விரும்பும் சமுதாயமாகும். இதற்காக நமது முன்னோர்கள் பெரும்பாடுபட்டனர். இதன் விளைவாக இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் நல்ல மாற்றம் உருவாகிக்கொண்டு இருக்கும் வேளையில், மீண்டும் பழைய காலத்துக்கு இழுத்து செல்லும் வகையில் மாணவர்கள் அற்ப காரணங்களுக்காக மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தனியார் பள்ளிக்கூடம் இருக்கிறது. அதில் தங்கள் பிள்ளைகள் படிப்பதே பெரிய கவுரம் என்று பெற்றோர் நினைப்பார்கள். அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்தில் சமீபத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவனை, அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவன் தன் பையில் மறைத்து வைத்து கொண்டுவந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினான்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை தடுக்க முயன்றபோது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. புத்தக பையில் அரிவாளை கொண்டுவந்து தன் நண்பனையும், பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையையும் வெட்டிய அந்த 14 வயது மாணவன் தன் செயலுக்கு கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சர்வ சாதாரணமாக நடந்து சென்று சரண் அடைந்திருக்கிறான். 2 மாதங்களுக்கு முன்பு பென்சில் யாருடையது என்பதில் ஏற்பட்ட முன்விரோதம்தான் இதற்கு காரணம்.
இந்த சின்ன தகராறு அடுத்த நொடியே காற்றில் கலந்ததுபோன்று மறைந்து போவதற்கு பதிலாக தீராத பகையாக உருவெடுத்திருக்கிறது. இதுதான் பிஞ்சு வயதில் அரிவாளை கையில் எடுக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், புத்தக பைக்குள் மறைத்து பள்ளிக்கூடத்துக்கு கொண்டுவந்து வெட்டும் அளவுக்கு நஞ்சு எண்ணத்தையும் விதைத்து இருக்கிறது. பள்ளி பருவத்தில் தோழனோடு தோள் சேர்வதால் துளிர்விடும் நட்பு என்பது நம்முடைய ஆயுள் வரையிலும் பசுமரத்தாணி போல நீங்காமல் நிலைத்து நிற்கக்கூடியது. இதனால் நீயும், நானும் ஒன்றுதான் என்ற மனநிலை மாணவர்களிடம் மேலோங்கவேண்டும். 'ஒரு பென்சில் தானே நீயே வைத்துக்கொள்' என்று மாணவர்கள் இருவரும் பரஸ்பரமாக கூறி விட்டுக்கொடுத்திருந்தால், இந்த பிரச்சினையே வந்திருக்காது. இதற்கான மனப்பக்குவத்தை மாணவர்களிடம், அவர்களுடைய பெற்றோரும், ஆசிரியரும் ஊட்டியிருக்கவேண்டும்.
நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் மாணவர்களிடையேயான மோதல் என்பது தொடர்கதையாகிவிட்டது. கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் அருகே 11-வது வகுப்பு மாணவன் வெட்டப்பட்டான். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாங்குநேரியில் 11-ம் வகுப்பு மாணவனும், அவனது சகோதரியும் கத்தியால் குத்தப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு மாணவர்கள் செல்போன் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டு கிடப்பதே முக்கிய காரணமாகும். அதில் இருந்து அவர்களை விடுவித்து களத்தில் வியர்வை சிந்தி ஓடியாடி விளையாட வைத்தால் பொறுமையும், புத்தி சாதுர்யமும் கிடைக்கும். இதேபோல எதிர்மறையான சிந்தனையில் இருந்து நேர்மறையான ஒளிவட்டத்துக்குள் அவர்களை நல்வழிப்படுத்தி கொண்டுவருவதற்காக பள்ளிகளில் நன்னெறி வகுப்புகளை நடத்தவேண்டும். இதுவே கல்வி பயிலும் காலத்தில் தீட்டவேண்டியது கத்தியை அல்ல, புத்தியை என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதாக இருக்கும். எனவே இந்த நடவடிக்கைகளை அரசும், பள்ளி கல்வித்துறையும் உடனடியாக எடுக்கவேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை செயல்படுத்தினால் எதிர்கால தலைமுறையினர் பூத்து குலுங்கும் மலர்களாக நாட்டுக்கே பெருமை சேர்ப்பார்கள்.