சென்ற இதழின் தொடர்ச்சி…
ஸம்பத்கரீ ஸமாரூட
ஸிந்தூர வ்ரஜ ஸேவிதா
ஞானிகளுக்கு ஞானத்தைத் தவிர மற்ற எல்லாமே அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஆனால், இந்த எல்லா சம்பத்துமே, சிறிய விஷயங்களிலிருந்து பெரிய ஞானம் வரையிலும் அம்பாள் காண்பித்து அது ஒவ்வொன்றும் யானைகள் மாதிரி இருக்கிறது. அந்த யானைகளையெல்லாம் அடக்கக் கூடிய சம்பத்கரீயாக இருக்கிறாள். அதனால், நாம் பண்டாசுரனால் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுத் தருகிறாள். இப்போது மீண்டும் கூர்மையாக இன்னொரு விஷயத்தை ஆழமாக பார்க்கலாம். அப்போதுதான் சம்பத் என்றால் என்ன என்று புரியும். உண்மையான சம்பத் என்பது இந்திரியங்கள் அனுபவிக்கக் கூடிய சப்தாதி விஷயங்கள்தான் இங்கு சம்பத். நம்முடைய இந்திரியங்கள் சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்கள் என்று மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற பஞ்சேந்திரியங்களின் மூலமாக எதை அனுபவிக்கிறோமோ அதுதான் இங்கு சம்பத். காதால் கேட்கிறோம். மூக்கால் நுகருகிறோம். தோலால் ஸ்பரிச சுகத்தை அனுபவிக்கிறோம். கண்களால் பார்க்கிறோம். நாக்கால் சுவைக்கிறோம். இந்த ஐந்து விஷயங்களால் அனுபவிக்கிறோம் அல்லவா… இது எல்லாமே சம்பத். இந்த சம்பத்துகளால் ஆன யானைகளை அம்பாள் காண்பிக்கிறாள். அதாவது அதனதன் உச்சகட்ட அளவில் அந்த அந்த இந்திரியங்கள் யானைப் பலத்தோடு செயல்படும். அதுவே சம்பதக்ரீ தேவியின் பேரருளாகும்.
அப்படி காண்பித்தவுடனே நமக்கு இங்கு சந்தேகம் வரும். வெளிநோக்கி போகக் கூடியதுதானே இந்த இந்திரியங்களுடைய வழக்கம். இப்படி வெளி நோக்கி பிரபஞ்சத்தை நோக்கி போனால் அது எப்படி அத்யாத்மமான ஆன்மிக வாழ்க்கைக்குச் சரியாக வரும். Internal ஆகத்தானே போக வேண்டுமென்று நமக்கு ஒரு சந்தேகம் வரும். இங்குதான் நமக்கு ஒரு விடை கிடைக்கிறது. இந்த நாமாவானது வெறுமே ஸிந்துர வ்ரஜ சேவிதா என்று இருந்தால் நாம் அப்படி யோசிக்கலாம். இந்த நாமாவில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. சம்பத்கரீ ஸமாரூட ஸிந்துர வ்ரஜ ஸேவிதா… இந்த சப்த ரூப ஸ்பரிசாதி விஷயங்கள் இருக்கிறதல்லவா… இந்த விஷயங்களை வந்து யானைக் கூட்டங்களாக அம்பாள் காண்பிக்கிறாள். ஆனால், யானைக் கூட்டங்கள் எப்படி இருக்கிறதெனில் தறிகெட்டு ஓடக் கூடிய யானைக் கூட்டமாக இல்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கு அம்பாள் சம்பத்கரீயாக இருக்கிறாள். அதனால், பஞ்சேந்திரியங்களான சப்தாதி விஷயங்கள் நம்மை கொண்டுபோவது போல் தெரிந்தாலும் கூட, ஒரு கட்டத்தில் வெளியே காண்பிப்பது போல காண்பித்து நம்மை internal ஆக திருப்பி விடுவாள். இதை நாம் அனுபவப் பூர்வமாக உணரும்போது புரியும். வெளியில் காண்பிப்பதுபோன்று காண்பித்து உள்ளுக்குள் திருப்புகிறாள் என்பது. நமக்கு எப்படி உள்ளுக்குள் internal ஆக திருப்புகிறாள்.
உதாரணமாக ஒரு சப்தம் இருக்கிறது. ஏதோ ஒரு ஓசை கேட்பதற்கு விருப்பம் இருக்கிறது. நாம் இப்படி ஓசையை கேட்க வேண்டுமென்ற விருப்பத்தினால், நம்முடைய மனமானது வெளியில் செல்லும். இப்போது சம்பதகரீ இங்கு என்ன செய்வாள் எனில், நாம் எந்த ஓசையை கேட்க வேண்டுமென்று நினைக்கிறோமோ… நமக்கு விருப்பமான ஓசையை என்ன ஆக்குவாள் தெரியுமா… உனக்கு ஓசையில் நாட்டம் இருக்குப்பா. பரவாயில்லை. சினிமா பாட்டையோ அல்லது மிகச் சாதாரணமாக ஓசையை நீ அனுபவிப்பதால் உன்னுடைய மனசானது வெளி நோக்கி போகுது. இவள் என்ன செய்கிறாள் எனில் சினிமா பாட்டுக்குப் பதிலா லலிதா சஹஸ்ரநாமமாக மாற்றி விடுவாள். இப்போது லலிதா சஹஸ்ரநாமத்தை கேட்கும்போது என்ன ஆகுமெனில்… அதே ஓசைதான்… ஆனால், மனமானது அந்தர்முகமாக திரும்புகிறது. இதற்கு முன்னால் கேட்ட அதே ஓசையை கேட்டு external ஆக சென்ற மனமானது, இந்த ஓசையை கேட்கும்போது internal ஆக திரும்புகிறது.
நமக்கு சப்தங்களின் மீது விருப்பம் இருக்கிறதெனில், அந்த சப்தங்களெல்லாவற்றையும் நாம சங்கீர்த்தனமாக சம்பத்கரீ மாற்றி விடுகிறாள். ரூபங்களை பார்க்க வேண்டுமெனில், எல்லா ரூபங்களையும் அம்பிகையின் வெவ்வேறு ரூபங்களாக மாற்றிக் கொடுத்துவிடுகிறாள். நாம் ஸ்பரிசம் பண்ண வேண்டுமென்று நினைக்கக் கூடியதை விஷயத்தை நாம் அம்பாளுக்கு போடக் கூடிய புஷ்பங்களாக மாற்றிக் கொடுத்து விடுகிறாள். நாம் நுகர வேண்டு மென்று நினைப்பதை அம்பாளுக்குரிய தூபத்தை நுகரக் கூடியதாகவும் மாற்றிக் கொடுத்து விடுகிறாள். நாம் சாப்பிட வேண்டுமென்று நினைப்பதை அம்பிகையினுடைய நிவேதனமாக மாற்றி விடக் கூடியதாகவும் மாற்றி விடுகிறாள். இப்போது பஞ்சேந்திரியங்களான விஷயங்களை எதை எதையெல்லாம் அனுபவிக்க வேண்டுமென்று நினைத்தோமோ அதை எல்லாவற்றையுமே அம்பாளுக்கு செய்யக் கூடிய பஞ்ச உபசாரங்களாக இங்கு மாறி விடுகிறது. கந்தம், தூபம், புஷ்பம், நிவேதனம், ரூபம், தீபம் என்று உபசாரங்களாக மாற்றிக் கொடுத்து விடுகிறாள்.
இங்குதான் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இங்குதான் இப்போதுதான் ஒருவனுக்கு உண்மையான சம்பத் என்ன என்று புரிய வரும். அதுவரையில் அவன் பிரபஞ்சத்தில் உள்ள ஏதோவொன்றை பற்றிக் கொண்டு இதுதான் சம்பத் என்று மயங்கியிருப்பான். ஓஹோ… இதுதான் உண்மையான சம்பத்தா என்று அவனுக்கு புரிய வரும். இந்த transformation ஐ கொடுக்கக் கூடிய நிலையை கொடுக்கக் கூடியவள்தான் சம்பத்கரீ ஆவாள். நாம் க்ரோதாகாராங்குசோஜ்வலா… என்கிற அங்குசத்திலிருந்து ஆவிர்பவிப்பவள் என்று சொன்னோம் அல்லவா… ஏன் கோபம் என்கிற அங்குசத்திலிருந்து ஆவிர்பவிக்க வேண்டும். ஏன் அங்கு கோபத்தை சொல்ல வேண்டுமெனில், நமக்கு இந்த இந்திரியங்கள் இந்த சம்பத்துகளால் கிடைக்கக்கூடிய சுகத்தை தேடிக் கொண்டு வெளியேநோக்கிப் போகிறதல்லவா… வெளிநோக்கிப் போகின்றது. அதனால் அந்த சுகத்தை முழுமையாக பெற முடியவில்லை. பெற முடியாதபோது நம்மையும் அறியாமல் ஒரு கோபம் வரும். இந்த இந்திரியங்களுக்கு வேண்டிய நேரத்தில் பெறாத நேரத்தில் ஒரு கோபம் வரும். அந்தக் கோபத்தை அங்குசமாக பயன்படுத்தி இந்த இந்திரியங்களை உள்நோக்கித் திருப்பி உண்மையான சுகம் எதுவென்று காண்பித்துக் கொடுப்பதால், க்ரோதாகாராங்குசோஜ்வலா… என்கிற க்ரோதம் என்கிற அங்குசத்திலிருந்து ஆவிர்பவிக்கிறாள். அப்படி ஆவிர்பவித்து எந்த கோபமானது வெளியிலிருந்து வரும் சுகத்தை அனுபவிக்க முடியவில்லை என்று இருந்ததோ அந்தக் கோபமே இங்கு உள்முகமாக அந்தர்முக திரும்பி உண்மையான சுகம் எது என்பதை காண்பித்துக் கொடுக்கிறது.
இப்படி உள்நோக்கித் திருப்பக் கூடியதை அம்பாள் செய்கிறாள். அப்படி செய்யக்கூடிய யானைக்கூட்டங்கள் நிறைந்த சம்பத்கரீயாக அம்பாள் இந்த விஷயத்தை செய்கிறாள். அந்த யானைக் கூட்டங்களெல்லாம் சம்பத்கரீக்கு உட்பட்டது. அந்த சம்பத்கரீயானவள் மஹாதிரிபுரசுந்தரிக்கு உட்பட்டவள். யானைக் கூட்டங்களாக இருக்கக் கூடிய சம்பத கரீயால் வணங்கப்படுபவள் யாரெனில் லலிதா மஹாதிரிபுரசுந்தரி. நம்முடைய இந்திரியங்களுடைய வேலை எப்போது தவறு கிடையாது. அந்த இந்திரியங்களுடைய வேலைக்குள் சம்பத்கரீயினுடைய வேலை எங்கு இருக்கிறதெனில், இந்திரியங்களுடைய வேலையில் ஒரு தெய்வீகத் தன்மையை divine touch ஐ அம்பாள் வைத்துவிடுகிறாள். அந்த divine touch ஐ வைப்பதுதான் சம்பதகரீ. இந்த தெய்வீகத் தன்மை இல்லையெனில் அது வெறுமே சம்சார ரீதியாக, சம்சார பந்தத்திற்குள் உண்டாக்கக் கூடியதாக அமைந்துவிடும். இந்த தெய்வீகத் தன்மையை தொடுதலை அவள் கொடுக்கும்போது இவையாவும் ஒரு சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்கக் கூடியதாக வந்துவிடும். மன ஏவ மனுஷ்யானாம்… காரணம் பந்த மோட்ச யோஹோ… என்று சொல்வார்கள். மனம்தான் பந்தத்திற்கும் காரணம். மோட்சத்திற்கும் காரணம். இந்த இந்திரியங்களுக்குள் இந்த divine touch ஐ உண்டுபண்ணுகிறாள் அல்லவா. அந்த divine touch தான் உண்மையான சம்பத்.
அப்போது நாம் இந்த லௌகீக விஷயங்களில் சம்பத்தை கேட்கக் கூடாதா… தாராளமாக கேட்கலாம். நாமே மேலே எத்தனை விதமான சம்பத்தை பார்த்தோம். இத்தனையும் கொடுத்துவிட்டு நம்மை சம்சார பந்தத்தில் தள்ளிவிட மாட்டாள். அத்தனையும் கொடுத்து அதிலுள்ள divine touch ஐ காண்பித்து, நம்மை இத்தனை சம்ப்பத்துக்களின் மூலமாகவே அவளை அடையும் வழியையும் காண்பித்துக் கொடுத்து விடுவாள். இந்த விஷயம் எல்லோருக்கும் சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த நாமமே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்லவில்லை. இது எல்லாவற்றையும் கொடுத்து இதன் மூலமாகவே உங்களை அம்பாள் கொண்டு வருவாள் என்று சொன்னால் எத்தனை சந்தோஷம் அது. இந்த நாமாவானது அவரவர் நிலையில் இருப்போருக்கு அவரவர்க்கு தேவையானதை அளிக்கும். கடைசியில் அந்த சம்பத்துக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை காண்பிக்கும். அந்த divinity என்கிற பாதையின் மூலமாக நாம் அம்பாளை அடையலாம்.
அதனால்தான் ஷீர்டி பாபாவிடம் நிறைய பேர் கேட்கும்போது, ‘‘உங்களை நோக்கி வருபவர்களுக்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறீர்களே. வரப் பிரசாதியாக இருக்கிறீர்களே. நீங்கள் மசூதியில் அமர்ந்துகொண்டு பெரிய மஹாராஜாக்களுக்கு வேண்டியதை கூட கொடுக்கிறீர்களே. இதன்மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள்’’ என்று கேட்டபோது.” அவர்கள் கேட்பதையெல்லாம் நான் கொடுக்கிறேன். ஏனெனில், இதையெல்லாம் கொடுத்ததற்கு பிறகு ஒருநாள் நான் கொடுக்க வேண்டியதை அவர்கள் பெறுவதற்காக…இதையெல்லாம் நான் கொடுக்கிறேன். ஒருநாள் நான் என்ன கொடுக்க வந்திருக்கிறேனோ அதை என்னிடம் கேட்பான். நானும் தருவதற்காக கொடுக்கிறேன்… ’’ என்று தீர்க்கமாக அழுத்திச் சொன்னார், பாபா. அம்பாள் என்ன செய்கிறாள் எனில், சம்பத்கரீயாக சம்பத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், அந்த சம்பத்தில் உள்ள தெய்வீகத்தை கொடுத்து ஞானத்தையும் அளிக்கிறாள். அந்த சப்தாதி விஷயங்களையே யானையாக வைத்திருக்கிறாள். அந்த ஸிந்துர வ்ரஜம் என்கிற யானைக் கூட்டத்தோடு அம்பாள் இருக்கிறாள். அந்த சம்பத்கரீயால் சேவிக்கப்படுபவளே லலிதா மஹா திரிபுரசுந்தரி என்பதையே இந்த நாமம் காண்பித்துக் கொடுக்கிறது. இந்த நாமத்திற்கு சாஸ்திரப்படியே ஒரு கோயிலை பார்க்கலாம். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரில் அருளும் பிரஹத் குஜாம்பாள் சம்பத்கரீ சொரூபிணி. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹி என்று சொல்வதுபோல, மதுரை மீனாட்சி ராஜ மாதங்கி என்று சொல்வோமல்லவா… அதுபோல திருவிடைமருதூர் பிரஹத் குஜாம்பாள் சம்பத்கரீ ஆவாள். இங்கு அம்பாள் சம்பதக்ரீ சொரூபத்தில்
இருக்கிறாள்.
(சுழலும்)
The post நிலையான செல்வங்களை அளித்திடும் நாமம் appeared first on Dinakaran.