விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், உற்சவம், மாசிமக திருவிழா, புத்தாண்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருப்பது போல் இந்த கோயிலில் உள்ள சிவனை வழிப்பட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அதன்படி நேற்று ஐரோப்பியா நாடுகளான ஹங்கேரியா, ஸ்லோவேக்கியா நாடுகளை சேர்ந்த 30 பேர் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். தொடர்ந்து கோயிலை சுற்றி வந்து கோயிலின் கட்டுமானம், கலை அமைப்புகளை பார்வையிட்டனர். இந்த குழுவின் ஆன்மீகப் பயண ஆலோசகரான சிதம்பரத்தை சேர்ந்த ஷியாம் என்பவர் கூறும் போது, கடந்த 20ம் தேதி இந்த குழு சென்னைக்கு வந்தது.
சென்னையில் கபாலீஸ்வரர் கோயில் மற்றும் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையார் கோயிலை தரிசனம் செய்ததுடன் கிரிவலம் சென்றனர். அதனை தொடர்ந்து இன்று (நேற்று) விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். நாளை (இன்று) சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும், அதனை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோயில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், திருவெண்காடு புதன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் செல்ல உள்ளனர்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்த குழு மார்ச் 1ம் தேதியன்று அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர். மேலும் மகா சிவராத்திரி, நாட்டியாஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகளையும் பார்வையிட உள்ளனர் என தெரிவித்தார். மேலும் அந்த குழுவின் தலைவர் லூகாஸ் ஜோல்டான் காபூர் கூறும் போது, தமிழகத்தில் உள்ள ஆன்மீக வழிபாட்டு முறைகள் எங்களை கவர்ந்துள்ளது. தமிழர் கலாச்சார முறைகளும் வித்தியாசமாக உள்ளது.
இங்குள்ள சித்தர் வழிபாடு, ஆன்மீக வழிபாடுகள் எங்களை கவர்ந்து விட்டது. குறிப்பாக தமிழக உணவுகள் நாங்கள் வாழ்நாளில் இதுவரை சாப்பிடாத உணவுகளாக சுவையுடனும், ஆரோக்கியத்தன்மையுடனும் உள்ளன என தெரிவித்தார். வெளிநாட்டை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சம்பவம் விருத்தாசலம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.