கொள்ளிடம் பகுதியில் 7,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி விதைக்கும் பணி தீவிரம்

3 hours ago 1

* ஹெக்டேருக்கு 2 முதல் 3 டன் மகசூல் கிடைக்கும்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் பணப்பயிரான பருத்தி பயிரிடும் பணி தீவிரமாக துவங்கி நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதி முழுக்க முழுக்க குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடியையே நம்பி இருந்து வருகிறது.

சம்பா அறுவடையின் போது வருடம்தோறும் உளுந்து மற்றும் பயறு விதைப்பு பணி நடைபெற்று கோடை காலத்தில் அறுவடை நடைபெறும். காலநிலை மாற்றத்தின் காரணமாக பாசனத்திற்கு வர வேண்டிய தண்ணீர் உரிய காலத்தில் வந்து சேராமல் காலம் தாழ்த்தி வருவதாலும், பருவமழை காலங்களில் திடீரென அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு நெற்பயிர்கள் சேதமடைந்து மீண்டும் இரண்டாவது முறை பயிர் செய்வதாலும் காலம் காலமாக உளுந்து மற்றும் பயறு சாகுபடி குறைந்து போனது.

இதனால் பணப் பயிர் என்று சொல்லக்கூடிய பருத்தி சாகுபடியை கொள்ளிடம் கடைமடை பகுதியில் விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் கடந்த ஐந்து வருடங்களில் வருடம் தோறும் பொதுவாக சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடியை செய்து வருகின்றனர்.

நெற்பயிர் அறுவடை முடிந்த உடன் கோடை காலத்தில் இந்த பணப்பயிர் விவசாயிகளுக்கு கணிசமான லாபத்தை தருவதால் விவசாயிகள் இதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுவாக, பருத்தி பரந்த அளவிலான மண்ணில் நன்றாக செழித்து வளரும். குறிப்பாக, நடுத்தர முதல் கனமான மண் வரை நன்கு வளரும்.

மண்ணின் வகையைப் பொறுத்து, வயலை 15 முதல் 20 செ.மீ ஆழம் வரை வளைப்பலகைக் கலப்பையின் மூலம் நன்கு உழுது, பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு பலுகுகள் கொண்டு உழ வேண்டும். வயலில் குச்சிகளை விடக்கூடாது. விதைப்புக்கு முன் நீர்ப்பாசனம் செய்வது, பயிர் சிறப்பாக அமைய மிகவும் அவசியம். தற்போது பருத்தி சாகுபடி துவங்கி ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை பயிர் செய்யப்படுகிறது.

பருத்தியில், விதைத்த முதல் 50 முதல் 60 நாட்கள் வரை பயிருக்கும்-களைக்கும் ஊட்டச்சத்து போட்டிக்கான மிக முக்கியமான நேரமாகும்.பயிர் முதிர்ச்சியடையும் போது, பருத்தி பெரும்பாலும் கைமுறையாக அறுவடை செய்யப்படுகிறது.

பருத்தி பயிர்கள் ஒத்திசைவான முதிர்ச்சியை வெளிப்படுத்தாததால், காய்கள் முழுமையாக வளர்ந்தவுடன் காலையில் அறுவடை செய்ய வேண்டும். பருத்தியின் மகசூல் பொதுவாக பாசன சூழலியலில் சராசரியாக ஹெக்டேருக்கு 2 முதல் 3 டன் மற்றும் கலப்பினங்களுக்கு 3.5 முதல் 4 டன் வரை ஒரு ஹெக்டேருக்கு கிடைக்கும்.

கோடைகால சாகுபடியாக பருத்தி பயிர் சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபத்தை பெற முடியும் என்ற நோக்கத்தில் விவசாயிகள் பருத்தி சாகுபடிசெய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 15 நாட்களாக பருத்தி விதை விதைக்கும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. உளுந்து மற்றும் பயறு சாகுபடி வரப்பு ஒரு பகுதியில் குறைந்து விட்டதால் அதற்கு பதிலாக பருத்தி சாகுபடி செய்வது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

The post கொள்ளிடம் பகுதியில் 7,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி விதைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article