நிலத்தடி நீருக்கு வரி அறிவித்த ஒன்றிய அரசை கண்டித்து தண்ணீர் கேனுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

4 hours ago 1

கோவை : நிலத்தடி நீரை எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, நிலத்தடி நீருக்கான வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்ததை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட கிளை சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தண்ணீர் கேனுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார். இதில், பங்கேற்ற விவசாயிகள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்ட முடிவில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒன்றிய அரசின் நீர்ப்பாசன துறை (ஜல் சக்தி துறை) அமைச்சர் ஹெச்.எம்.பாட்டீல், நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்திடும் திட்டத்தை அமலாக்கிட ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக டெல்லியில் அறிவித்துள்ளார். நிலத்தடி நீர் கட்டுப்பாடற்ற முறையில் வெளியே எடுத்து பயன்படுத்தப்படுகிறது.

எனவே, இதை முறைப்படுத்திடும் வகையில், விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து விவசாயிகளுக்கு தண்ட(னை) வரி விதித்திடவும், மாநில அரசுகளோடு இணைந்து இத்திட்டத்தை அமலாக்கிட ரூ.1,600 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சரின் இந்த அறிவிப்பு, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பல்வேறு வழிகளில் ஒன்றிய அரசு தனது கஜானாவை நிரப்பி வருகிறது. தற்போது, இந்த வரி விதிப்பு மூலம் விவசாயிகளுக்கு எதிராக மீண்டும் ஒரு தாக்குதலை தொடுத்துள்ளது. நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண்மை உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால்தான் உணவு தேவையில் தன்னிறைவு பெற்று வெளிநாட்டிற்கு இந்திய அரசால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் அந்நிய செலவாணி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகி நமது நாட்டுக்கு கிடைத்து வருகிறது. நெல் விளைச்சல் நடப்பாண்டு கூடுதலாக இருக்கும் என்ற நிலையில்தான் சேமிப்பில் இருக்கும் அரிசியை எடுத்து, எத்தனால் தயாரிக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் நீர் தேவை, அண்டை மாநிலங்களையே நம்பியே உள்ளது. தமிழ்நாட்டிற்கு தேவையான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையில், வேளாண்மை உற்பத்தி பெருகி வருவதற்கு அடிப்படை, நிலத்தடி நீர் பயன்பாடாகும். தேவைக்கு மேல் விவசாயிகள் எவரும் நிலத்தடி நீரை எடுப்பதில்லை.

பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டார் உள்ளிட்ட மின்சாதன கருவிகள் பழுதுபட்டு வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகளுக்கு தெரியும், நிலத்தடி நீரை மேம்படுத்தி சேமித்திட வேண்டும் என்ற அக்கறை விவசாயிகளுக்கும் இருக்கிறது. ஏனெனில், அந்த நீரை நம்பித்தான் விவசாயிகள் உள்ளனர்.

இதை ஒன்றிய அரசு உணரவேண்டும். நிலத்தடி நீரை சேமித்திடும் அக்கறை அரசுக்கு உண்மையாகவே இருந்தால், நீர்நிலைகளை தூர்வாரி, மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். வீணாக கடலில் கலக்கும் ஆயிரக்கணக்கான டிஎம்சி நீரை சேமிக்கும் கலன்களை உருவாக்க வேண்டும். இதற்கான திட்டங்களை வகுக்க நிதி ஒதுக்கீடு செய்யாமல், விவசாயிகளையே குறி வைத்து தாக்கும் செயலை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

நீண்ட, நெடிய போராட்டங்கள், எண்ணற்ற விவசாயிகளின் இறப்பிற்கு பின்னர்தான் தமிழ்நாட்டில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்படுகிறது. இதையும் துண்டித்திடவே ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. ஆகவே, ஒன்றிய அரசு உடனடியாக இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

The post நிலத்தடி நீருக்கு வரி அறிவித்த ஒன்றிய அரசை கண்டித்து தண்ணீர் கேனுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article