
பாட்னா,
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் அகியபூர் கிராமத்தில் முகியா என்பவருக்கும் மந்து சிங் என்பவருக்கும் இடையே பல மாதங்களாக நிலப்பிரச்சினை நிலவி வந்தது. இது இரு தரப்பு மோதலாக வெடித்தது
இந்நிலையில், மந்து சிங் மற்றும் அவரது சகோதரர்களான வினோத் சிங், சுனில் சிங், விரேந்திர சிங், பின்ஜு சிங் ஆகியோர் இன்று அதிகாலை 6 மணியளவில் கிராமத்திலுள்ள கால்வாய் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த முகியா தரப்பை சேர்ந்த சிலர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட்டனர்.
இந்த சம்பவத்தில் மந்து சிங், பின்ஜு சிங் படுகாயமடைந்தனர். அவரது சகோதரர்களான வினோத், சுனில், விரேந்தர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.