
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் உள்ள கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு (சிட்கோ) சொந்தமான நிலத்தை சென்னை மேயராக இருந்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது அ.தி.மு.க. ஆட்சியில் சி.பி.சி.ஐ.டி. (மாநில குற்றப்பிரிவு போலீஸ்) வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு போலீசார் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கு இன்று மீண்டும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா இருவரும் ஆஜராகவில்லை. எனினும் மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமைச்சரவை கூட்டம் நடப்பதால் விசாணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா இருவரும் அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.