போபால்,
மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் கொலாரஸ் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
ரெயில் டிரைவர் அவசரகால பிரேக்குகளை அழுத்தியபோதும், ரெயிலை நிறுத்த முடியவில்லை. அந்த மாணவனை காப்பாற்றவும் முடியவில்லை. அந்த மாணவன் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான். எனினும், அதில் பலனின்றி மாணவன் உயிரிழந்து விட்டான்.
இந்நிலையில், பள்ளியில் ஆசிரியர் ஒருவரால் துன்புறுத்தலுக்கு ஆளான விவரங்களை வீடியோ ஒன்றில் அந்த மாணவர் வெளியிட்டு உள்ளார். அதில், பல அதிர்ச்சியான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன.
அந்த பள்ளியில் பணியாற்றும், அந்த மாணவனின் ஆசிரியர்களில் ஒருவர் மாணவனை துன்புறுத்தியதுடன், பீர் குடிக்க கட்டாயப்படுத்தினார் என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளான். பிற மாணவர்களையும் மதுபானம் குடிக்கும்படி ஊக்குவித்து வந்துள்ளார் என்றும், தவிர அவரிடம் டியூசன் படிக்க சொல்லி வற்புறுத்தினார் என்றும் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளான்.
அவரிடம் படிக்கவில்லை என்றால், குறைவான மதிப்பெண்களை வழங்குவேன் என ஆசிரியர் மிரட்டியுள்ளார் என்றும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தற்கொலை சம்பவம் பற்றி அரசு ரெயில்வே போலீஸ் மற்றும் கொலாரஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.