நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு என வாக்குவாதம் பொதுக்குழுவிலிருந்து கோபத்துடன் வெளியேறினார் துரை வைகோ: மதிமுகவினர் கடும் அதிர்ச்சி

12 hours ago 2

சென்னை: நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுக்குழுவில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடையே நடந்த வாக்குவாதத்தால் கடுப்பான மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார். இச்சம்பவம் மதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சிடைய ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூடியதும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர். அதை தொடர்ந்து, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இயக்கத்துக்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் ஒரு தரப்பு அதிருப்தி அடைந்து நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வெளிப்படையாக பேசத் தொடங்கினர். இதனால் கூட்டத்தில் திடீரென சலசலப்பு நிலவியது. அப்போது, சாதி அடைப்படையில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சில நிர்வாகிகள் எழுந்து குற்றம்சாட்டினர். இதனால், கூட்டத்தில் இருதரப்பினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் தொடர்ந்து வாக்குவாதம் நீடித்தது.

இதையடுத்து, முதன்மை செயலாளர் துரை வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டு அவர்களை இருக்கையில் அமர சொன்னார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் இருதரப்பினரும் ஒவருவருக்கொருவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தகராறு முற்றியது. இந்நிலையில், தான் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் கோபமடைந்த துரை வைகோ பொதுக்குழு கூட்டத்தில் இருந்து கடும் கோபத்துடன் வெளியேறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிர்வாகிகள் துரை வைகோவை நோக்கி ஓடினர். தாயகத்தை விட்டு வெளியேறி தனது காரில் ஏறினார். அவரது காரை மறித்த நிர்வாகி ஒருவர், ‘தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்றார். மற்றொரு நிர்வாகி அவர் முன்னேயே, ‘‘பதவிகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதை நான் சும்மா விடமாட்டேன் தீக்குளிப்பேன்’’ என்றார். இதனால் மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் முன்பு தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

* அதிமுக – பாஜ கூட்டணி 3 மாதத்துக்கு நீடிக்குமா? வைகோ பரபரப்பு பேட்டி
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை, எழும்பூரில் உள்ள தாயகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னணியின் தலைவர் ஆவடி இரா.அந்திரிதாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும் செயலை ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் கைவிட வேண்டும். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் ஒப்பந்தமுறையிலான வேலை வாய்ப்பு திட்டத்தை கைவிட்டு, நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், ராணுவம், ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ், தபால், மின்சாரம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தனியாரை அனுமதிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக-பாஜ கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் போது எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மவுன சாமியாக இருந்தார். முழுக்க முழுக்க ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மட்டுமே பேசினார். தமிழ்நாட்டுக்கு சாதகமாக எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. எனவே, அதிமுக – பாஜ கூட்டணி நிலைக்குமா, நீடிக்குமா அல்லது மூன்று மாதங்களில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிலைகுலையுமா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு என வாக்குவாதம் பொதுக்குழுவிலிருந்து கோபத்துடன் வெளியேறினார் துரை வைகோ: மதிமுகவினர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article