நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்; ரோகித் களமிறங்குவது சந்தேகம்..?

4 hours ago 1

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது.

அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வரும் 2ம் தேதி எதிர்கொள்கிறது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு 2 நாட்கள் ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடாத அவர், பிசியோதெரபி எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா களமிறங்குவது சந்தேகம் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துவார் எனவும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

Read Entire Article