நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: பும்ராவிற்கு ஓய்வா..? - துணை பயிற்சியாளர் பதில்

2 weeks ago 6

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

முன்னதாக புனேயில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் நியூசிலாந்து ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் கடைசி 7 விக்கெட்டுகளுக்கு வெறும் 51 ரன்கள் மட்டும் எடுத்தது. அதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் போராடியும் இந்தியா தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் 51 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழப்பது ஒரு சரிவல்ல என்று இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அது போன்ற மோசமான பேட்டிங்கை வருங்காலத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான வழியை கண்டறிவோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 3வது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"நான் அதை சரிவு என்று சொல்ல மாட்டேன். நீங்கள் விக்கெட்டுகளை அதிகமாக இழப்பது அல்லது எடுப்பது போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் அவ்வப்போது நடக்கும். நாங்கள் 51 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம். அது மனநிலையைப் பொறுத்தது. நிச்சயம் அது போன்ற விஷயங்களை தவிர்க்க நாங்கள் முயற்சி செய்வோம். அதுதான் எங்களுடைய செயல்முறை.

பும்ரா அதிகமாக பந்து வீசவில்லை. அவருக்கு போட்டியின் இடையே போதுமான ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பணிச்சுமை எப்போதும் எங்களுடைய மனதில் இருக்கிறது" என்று கூறினார்.

Read Entire Article