நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோகித் டக் அவுட்.. முதல் நாளில் இந்தியா 16/1

3 weeks ago 7

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை எந்தவித சிக்கலுமின்றி எதிர்கொண்டது. ஆனால் சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 9 பந்துகளை சந்தித்த நிலையில், சவுதி பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கில் - ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி முதல் நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Read Entire Article