மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனது. இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா களமிறங்க உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் இந்திய அணியினர் அறைக்குள் அமர்ந்திருப்பதில் அர்த்தம் இல்லை என முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் இந்திய அணியினர் நியூசிலாந்து தோல்வியை முற்றிலும் மறந்து விட்டு அதிகமாக பயிற்சிகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். அப்படியே நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் இப்போதும் நம்மால் வெல்ல முடியும் என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "மீண்டும் அடிப்படைக்குச் செல்லுங்கள். பயிற்சி, பயிற்சி, பயிற்சிகளை எடுங்கள். நான் அறையில் அமர்ந்து கொண்டு முன்னேறுவேன் என்று சொன்னால் அது நடக்கப் போவதில்லை. ஒருவேளை நீங்கள் மோசமான காலங்களில் இருந்தால் அதிகமாக எடுக்கும் பயிற்சிகள் உங்களை சிறந்தவராக மாற்றும். விராட் கோலி, ரோகித் சர்மா 15 வருடங்கள் விளையாடி தங்களை நிரூபித்தவர்கள். அவர்கள் சிறந்த வீரர்கள். சில நேரங்களில் இது அதிகமாக கவனம் செலுத்துவதை பற்றியதாகும்.
எனவே கடந்த தொடரை மறந்து விட்டு களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள் என்று அவர்களுக்கு நான் சொல்வேன். இந்தத் தொடரை நீங்கள் மறந்து விட்டு பார்த்தால் மற்றபடி இந்திய அணியினர் நன்றாகவே செயல்பட்டுள்ளார்கள். எனவே இந்திய அணிக்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். உங்களிடம் இருக்கும் பிரச்சினைகளை வேகமாக சரி செய்து கொள்வது முக்கியம். நாம் நம்முடைய பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்கள், பவுலர்கள் ஆகியோரால் பெருமை அடைகிறோம்.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்காக அவர்களுக்கு நான் நல்ல வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். கடினமான காலங்கள் முடிந்து விட்டன. தற்போது நீங்கள் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். இதுவே நான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு சொல்லும் செய்தியாகும். நம்முடைய இந்திய அணிக்கு என்னுடைய சிறந்த வாழ்த்துகள்" என்று கூறினார்.