பெங்களூரு: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து போராடி வருகிறது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது நாளில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 31.2 ஓவரில் 46 ரன் மட்டுமே எடுத்து பரிதாபமாக சுருண்டது. பன்ட் 20, ஜெய்ஸ்வால் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (5 பேர் டக் அவுட்). நியூசிலாந்து பந்துவீச்சில் ஹென்றி 5, ஓ’ரூர்கே 4, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்திருந்தது. கேப்டன் லாதம் 15, வில் யங் 33, கான்வே 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரச்சின் ரவிந்த்ரா 22 ரன், டேரில் மிட்செல் 14 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஒரு முனையில் ரச்சின் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த… மிட்செல் 18, பிளண்டெல் 5, பிலிப்ஸ் 14, ஹென்றி 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் பார்ட்னர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் ரச்சின் விளாசல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
நியூசிலாந்து 64.5 ஓவரில் 233 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ரச்சின் – டிம் சவுத்தீ இணைந்து அதிரடியில் இறங்க… நியூசிலாந்து ஸ்கோர் வேகம் எடுத்தது. ரச்சின் சதம் விளாசி அசத்த, சவுத்தீ அரை சதம் அடித்தார். இருவரும் 8வது விக்கெட்டுக்கு 137 ரன் ரன் சேர்த்து அசத்தினர். சவுத்தீ 65 ரன் (73 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), அஜாஸ் படேல் 4, ரச்சின் ரவிந்த்ரா 134 ரன் (157 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன் குவித்து (91.3 ஓவர்) ஆல் அவுட்டானது.
இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 3, சிராஜ் 2, அஷ்வின், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 356 ரன் பின்தங்கிய நிலையில் கடும் நெருக்கடியுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் – கேப்டன் ரோகித் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 35 ரன் (52 பந்து, 6 பவுண்டரி), ரோகித் 52 ரன் (63 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அஜாஸ் படேல் சுழலில் ஆட்டமிழந்தனர். இக்கட்டான கட்டத்தில், விராத் கோஹ்லி – சர்பராஸ் கான் ஜோடி நம்பிக்கையுடன் அடித்து விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
சர்பராஸ் 42 பந்தில் அரை சதம் விளாச, கோஹ்லி 70 பந்தில்50 ரன்னை எட்டினார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 136 ரன் ரன் சேர்த்தனர். கோஹ்லி 70 ரன் (102 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிலிப்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளெண்டல் வசம் பிடிபட்டார். அத்துடன் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்துள்ளது (49 ஓவர்). சர்பராஸ் 70 ரன்னுடன் (78 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் உள்ளார். நியூசி. தரப்பில் அஜாஸ் 2, பிலிப்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இந்தியா இன்னும் 125 ரன் பின் தங்கியுள்ள நிலையில் இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
* விராத் 9000
இந்திய வீரர் விராத் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் 9000 ரன் என்ற மைல்கல்லை நேற்று எட்டினார். அவர் தனது 116வது டெஸ்ட், 197வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கோஹ்லி இதுவரை 9017 ரன் (அதிகம் 254*, சராசரி 48.74, சதம் 29, அரை சதம் 31) குவித்துள்ளார். டெஸ்டில் 9000 ரன் எடுத்த 4வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டில் 15,921 ரன் குவித்து முதலிடம் வகிக்கிறார். ராகுல் டிராவிட் (13,265), சுனில் கவாஸ்கர் (10,122) 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர். வி.வி.எஸ்.லக்ஷ்மண் (8781) 5வது இடத்தில் உள்ளார்.
The post நியூசிலாந்து 402 ரன் குவிப்பு 2வது இன்னிங்சில் போராடுகிறது இந்தியா: ரோகித், கோஹ்லி, சர்பராஸ் அரை சதம் appeared first on Dinakaran.