
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 32). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளராக உள்ளார். இவரது மனைவி கோமதி (28) திருநின்றவூர் நகராட்சியின் 26 -வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இவர்களுக்கு தேவேஷ் (9), அம்பேத் என்ற தேசிங் (7), யாழினி ஜெயா (5), பிரணவ் (ஒன்றரை வயது) என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கோமதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர்தான். மனைவியின் பழக்கத்தை கண்டுபிடித்த ஸ்டீபன்ராஜ் அவரை கண்டித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டீபன்ராஜின் தம்பி அஜித், கோமதியின் செல்போனை தற்செயலாக எடுத்து பார்த்துள்ளார். அப்பொழுது கோமதி ஆண் நண்பருடன் சேர்ந்து எடுத்த போட்டோ அதில் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், அண்ணன் ஸ்டீபன்ராஜிடம் அதை காண்பித்துள்ளார்.
போட்டோவை பார்த்து ஆத்திரம் அடைந்த ஸ்டீபன் ராஜ், கோமதியிடம் சண்டை போட்டுள்ளார். நேற்று இரவோடு இரவாக கோமதியை அதே தெருவில் உள்ள அவரது சித்தி வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, அவரிடம் கோமதிக்கும், ஆண் நண்பருக்கும் உள்ள பழக்கத்தை கூறி, புத்திமதி சொல்லுமாறு கூறியுள்ளார். பிறகு, அங்கிருந்து அவர் சென்ற நிலையில், கோமதி சற்று நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இதை தற்செயலாக பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன்ராஜ், தனது தம்பி அஜித்திடம், "கோமதி கோபித்துக் கொண்டு போகிறாள். எங்கேயாவது போய் ரெயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துவிடக்கூடாது" என கூறி, அவரை பின்தொடர கூறியுள்ளார்.
உடனடியாக, அஜித்தும் உறவினர் ஜான்சனுடன் மோட்டார் சைக்கிளில் கோமதியின் பின்னால் ரகசியமாக சென்றனர். ஷேர் ஆட்டோவில் சென்ற கோமதி, ஆவடி செக் போஸ்ட் அருகே இறங்கினார். அங்கே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த ஆண் நபர் தனது நண்பர்களுடன் காரில் நின்று கொண்டிருந்தார்.
அவர்களிடம் கோமதி சென்றபோது, அஜித்தும் அங்கு சென்று அவரது ஆண் நண்பரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், இதுகுறித்து தனது அண்ணன் ஸ்டீபன் ராஜிடமும் தகவல் தெரிவித்தார்.
இதனால், ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற ஸ்டீபன் ராஜ் மோட்டார் சைக்கிளில் அங்கு விரைந்தார். ஆனால், அதற்குள் மனைவியின் ஆண் நண்பர், அவருடைய சகாக்களுடன் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுவிட்டார்.
இதனால், மனைவியை ஷேர் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு ஸ்டீபன் ராஜ் வீடு திரும்பினார். அவருடைய மோட்டார் சைக்கிளை ஜான்சன் ஓட்டிவந்தார்.
ஆட்டோவில் வைத்தே மனைவி கோமதியிடம், நமக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றன. இதுபோன்று நடந்துகொள்ளாதே என்று ஸ்டீபன் ராஜ் கூறியுள்ளார். ஆனால், அதற்கு செவி சாய்க்காத கோமதி, திருநின்றவூர் வந்து இறங்கியதும், வீட்டிற்கு செல்லாமல், ரெயில்வே சுரங்கப்பாதை நோக்கி சென்றுள்ளார்.
இதனால், ஆத்திரத்தில் ஸ்டீபன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கோமதியை தலை, முதுகு, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கோமதி, துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய அவரது கணவர் ஸ்டீபன்ராஜ், அஜித், ஜான்சன் ஆகியோரை தேடி வந்தனர். இன்று காலை அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கோமதியின் ஆண் நண்பரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.