
ஜெய்ப்பூர்,
டோங்கின் ராஜ்மஹால் கிராமத்தில் டிராக்டர் மோதி இளைஞர் ஒருவர் இறந்ததை அடுத்து கிராம மக்களின் கோபம் வெடித்தது. கோபமடைந்த கிராம மக்கள் போலீசாரை தள்ளி அடித்து உதைத்தனர், இதனால் போலீசார் அங்கிருந்து ஓட வேண்டியதாயிற்று. இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள ராஹ்மஹால் கிராமத்தை சேர்ந்த பப்பு என்ற இளைஞர், கடந்த புதன்கிழமை(நேற்று) இரவு டிராக்டர் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து சம்பந்தப்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், உயிரிழந்த பப்புவின் சடலத்துடன் தியோலி-ராஜ்மஹால் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும், அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இரவு முழுவதும் போராட்டம் நீடித்த நிலையில், கிராம மக்களை சமாதானப்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால் அவர்கள் அதற்கு உடன்படாததால், இன்று காலை வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எம்.எல்.ஏ. ராஜேந்திர குர்ஜார், டி.எஸ்.பி. ராம் சிங், தியோலி காவல் நிலைய அதிகாரி தவுலத் ராம் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பேச முயன்றபோது, கோபமடைந்த கிராம மக்கள் சிலர் போலீசாரை தள்ளிவிட்டு தள்ளுமுள்ளு செய்தனர். மேலும் கான்ஸ்டபிள்களின் தலையை பிடித்து இழுத்து, சரமாரியாக கன்னத்தில் அறைந்து கிராம மக்கள் அவர்களை அடித்து உதைத்தனர்.
அங்கிருந்த பெண்கள் சிலர் போலீசாரை ஓட ஓட விரட்டிச் சென்று அடித்தனர். இதனால் போலீசார் பயந்து அங்கிருந்து தப்பி ஓடத் தொடங்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் கொடுக்க வேண்டிய காவல்துறையினர், பொதுமக்களை கண்டு அஞ்சி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.