சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் செல்ல 3 நாட்கள் முற்றிலும் தடை: தூத்துக்குடி காவல்துறை உத்தரவு

3 hours ago 2

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7.7.2025 அன்று காலையில் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரக்கூடும். இதனால் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நாட்களான 5.7.2025, 6.7.2025 மற்றும் 7.7.2025 ஆகிய மூன்று நாட்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் மற்றும் திருச்செந்தூர் வழியாக செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. எனவே திருச்செந்தூர் வருவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்லவும்.

மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும், கன்னியாகுமரி, உவரி, திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் திசையன்விளை/ சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூரை கடந்து செல்லும் வாகனங்களும் திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) பாதையை தவிர்த்து வேறு மாற்று பாதையில் செல்லவும். எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article