நிதீஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆவாரா? பிரசாந்த் கிஷோர் பதில்

1 week ago 2

பாட்னா,

பீகாரில், நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது. அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் வரவுள்ள பீகார் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், அந்த தேர்தலில் முதல்-மந்திரி நிதீஷ் குமார் மீண்டும் வெற்றி பெறுவாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார்.

அவரிடம் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என கேட்கப்பட்டதற்கு, கட்சி முடிவு மேற்கொண்டால், அதன்படி நிச்சயம் போட்டியிடுவேன். தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ரகோபூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சி விரும்பினால் நான் போட்டியிடுவேன் என்றார்.

இந்த தொகுதியில் இருந்தே, ராஷ்டீரிய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி மற்றும் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பல்வேறு முறை வெற்றி பெற்றுள்ளனர்.

நிதீஷ் குமார் மீண்டும் வெற்றி பெற்று முதல்-மந்திரி ஆவாரா? என கேட்டதற்கு பதிலளித்த கிஷோர், கோவிட் பரவலை நிர்வகிப்பதில் அவர்கள் குழப்பத்தில் தவித்தனர். மக்கள் துன்பத்தில் ஆழ்ந்தனர். நிதீஷ் குமார் அவருடைய அரசியல் ஆட்டத்தின் கடைசி பகுதியில் நிற்கிறார்.

அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆவதற்கு ஒருபோதும் பா.ஜ.க. அனுமதிக்காது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்க போவதில்லை. இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றினாலும், நிதீஷ் குமார் முதல்-மந்திரி ஆகமாட்டார். அதனால், அவர் 5 மாதங்களுக்கே முதல்-மந்திரியாக இருப்பார் என கூறியுள்ளார்.

ஜன் சுராஜ் கட்சி, தேர்தலை எப்படி அணுகும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஊழல், புலம்பெயர்தல் மற்றும் நிர்வாகத்தில் போதிய அளவு திறன் இல்லாமை ஆகிய மூன்று விவகாரங்களையும் வைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என்றார். பீகாரில் 9-வது முறையாக நிதீஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

Read Entire Article