மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு.. கும்பாபிஷேக பணி தொடங்கியது

1 day ago 1

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கருவறைக்கு தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது.

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 14-ம் தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மீறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

அதன்படி திருப்பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நவம்பர் 24-ம் தேதி ரூ.1.70 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். ஆகம விதிக்குட்பட்டு புதிய உத்திரம், பட்டியல், கழுக்கோல் அமைத்து மேற்கூரை அமைக்கும் பணி நடந்தது. கடந்த 4 வருடங்களாக மூலஸ்தானத்தில் மரத்திலான கூரைப்பணிகள், மேற்கூரை ஓட்டுப் பணிகள், சுற்றுப்பிரகாரம் கருந்தளம் அமைக்கும் பணி ஆகியவை நிறைவடைந்துள்ளன. ஆகம விதிப்படி கன்னி மூலையிலிருந்த பெரிய சக்கர தீவெட்டி அக்னி மூலைக்கு ஏற்கனவே அலுவலக அறையுடன் இருந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈசான மூலையில் புதிதாக கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிணற்றிலிருந்துதான் அபிஷேகத்திற்கு நீர் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாம் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த காங்கிரீட் தளம் இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எந்த தடங்கலுமின்றி வெளிப்பிரகாரத்தை சுற்றிவர வசதி ஏற்பட்டுள்ளது.

முன்பு இதன் மேல் போடப்பட்டு வந்த மரத்திலான கை, கால், உருவம் போடும் இடம் மாற்றப்பட்டு கிழக்குப்பகுதியில் தேங்காய் உடைக்கும் இடத்தின் மேல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக நடந்து வந்த திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மே மாதம் 11-ம் தேதி ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மே 7-ம் தேதி பூர்வாங்க பூஜைகள் துவங்குகின்றன. இதற்காக கும்பாபிஷேக யாகசாலை கால் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கோவில் தந்திரி சங்கரநாராயணன் கால் நாட்டினார். இந்நிகழ்வில் தேவசம் இணை ஆணையர் பழனிக்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article