நெல்லை,
நெல்லை நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழக வரலாற்றுப் பெருமைக்கு நெல்லைதான் அடையாளம். சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட மண் திருநெல்வேலி. எந்த ஆட்சியாக இருந்தாலும் அதில் முக்கிய நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. ஓராண்டு, ஈராண்டு அல்ல 17 ஆண்டுகள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் பூலித்தேவன். நெல்லையப்பர் கோவிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் வெள்ளி தேர் ஓடும்.
பொருநை ஆற்றின் கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. ரூ.33 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக பணிகள் ஏப்ரல் மாதத்திற்கு முடிந்துவிடும்.
தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை வறண்ட இடங்களான திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம், 2 ஆண்டுகளாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதிய புறவழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு நிதியும் கிடையாது; நீதியும் கிடையாது என மத்திய அரசு ஒதுக்கிவிட்டது. நிதி தராத மத்திய அரசைக் கண்டித்தோம்; நீதிமன்றத்திற்கு சென்றோம். நெல்லைக்கு அல்வா பேமஸ்; மாநில அரசுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் பேமஸ். நெல்லையில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அந்த நீரை சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கு விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணியில் கழிவுகள் கலப்பது தடுக்கப்படுவதோடு, தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிப்பு நீரை பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லைக்கு புதிய திட்டங்களை பட்டியலிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
* 2 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள்
* பாளையங்கோட்டையில் Y வடிவ ரயில்வே மேம்பாலம்,
* தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம்
* பாபநாசம் கோயில் வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்
* மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம்