மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

3 hours ago 2

புதுடெல்லி,

தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின்போது, கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில அறிவுறுத்தல்களை கூறியிருந்தது. இதற்கிடையே நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுதொடர்பான மசோதாக் களுக்கு 3 ஆண்டுகளாக பதில் அளிக்காதது ஏன்? என்று தமிழக கவர்னருக்கு, சுப்ரீம் கோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும் விசாரணை இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கவர்னர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?. சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்?. சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி கவர்னர் உணர்ந்தார்?. இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள் என கவர்னர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதற்கு கவர்னர் தரப்பில் ஆஜரான வக்கீல், துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு கவர்னர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?.

அப்போது நீதிபதிகள், பல்கலை. மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்?. கவர்னர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என கூறினர்.

கவர்னர் தரப்பு: பல்கலை. செயல்பாடு குறித்து ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது. யு.ஜி.சி விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது. அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதாவை மாநில அரசால் கொண்டு வந்தது.

கவர்னர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் கவர்னர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்பலாம். குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே கவர்னரை கேட்க வைக்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது. கவர்னர் அரசியலமைப்பு பிரிவு 200ல் விதி 1ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது, பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவதாக ஆகும் என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், கடந்த 2023ம் ஆண்டு மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட பின்னர், தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்?. 2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?.

அட்டர்னி ஜெனரல்: இல்லை, மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள்: ஜனாதிபதியும் ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா?.

நீதிபதிகள்: ஜனாதிபதி மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா?

கவர்னர் தரப்பு: ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை

நீதிபதிகள்: அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.

கவர்னர் தரப்பு: கவர்னரின் பணிகள் என்பது அரசியலமைப்பின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு அங்கம் ஆகும். மேலும் கவர்னருக்கு அனுப்பிய அனைத்து மசோதாக்களும் புதிய சட்டங்கள் அல்ல, மாறாக அவை சட்ட திருத்தங்கள். அதனை ஜனாதிபதி முடிவுக்காக கவர்னர் நிறுத்தி வைக்கிறார்.

நீதிபதிகள்: பல்கலை.களின் தரம், துணைவேந்தர்கள் தேர்வு குறித்து கவலை கொண்டு அந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தால், அடுத்து என்ன? என கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினர்.

Read Entire Article