நிதி நிறுவனத்தில் வேலை என கூறி 9 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது

1 day ago 2

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 34). அம்மாபேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் (35). இவர்கள் 2 பேரும் பள்ளப்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கினர். இதில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி முகநூலில் விளம்பரம் செய்தனர்.

இதை பார்த்து வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் விண்ணப்பித்தனர். பின்னர் அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி உள்ளனர். இதையடுத்து அதில் தேர்வான 9 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி உள்ளனர். அப்போது அவர்களிடம் டெபாசிட் தொகை செலுத்துமாறு ஆனந்த், செல்வராஜ் ஆகியோர் கூறி உள்ளனர். இதை நம்பி அவர்கள் மொத்தமாக ரூ.15 லட்சம் வரை செலுத்தினர்.

அதன்பிறகு அவர்களுக்கு நிறுவனத்தில் வேலை வழங்கவில்லை. இதையடுத்து தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து வேலை வழங்குவதாக கூறி 9 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த ஆனந்த், செல்வராஜ் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வேறு நபர்களை ஏமாற்றினார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article